சென்னை செண்ட்ரல் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் ஹவுரா இடையே புதிய அம்ரித் பாரத் ரயில் சேவை தொடங்கப்படவிருக்கிறது. மொத்தம் 1,622 கிலோமீட்டர் தூரம் இந்த ரயில் பயணிக்கவுள்ளது. இது தொடர்பான பயண நேரம், கட்டணம் மற்றும் வழித்தடம் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகியுள்ளன.
நாடு முழுவதும் சாமானிய மக்களுக்கு ஏற்ற வகையில் குறைந்த கட்டணத்தில் 50 அம்ரித் பாரத் ரயில்களை நடப்பு நிதியாண்டில் அறிமுகம் செய்ய ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. அந்த வரிசையில், சென்னை செண்ட்ரல் வரை ஹவுராவில் இருந்து இயக்கப்படும் இந்த ரயில், விசாகப்பட்டினம் வழியாக செல்லும் என கூறப்படுகிறது.

கரக்பூர், பலேஸ்வர், பத்ராக், கட்டாக், புவனேஷ்வர், குர்தா ரோடு சந்திப்பு, விஜயநகரம், விசாகப்பட்டினம், ராஜமுந்திரி, விஜயவாடா சந்திப்பு, தெனாலி சந்திப்பு, ஓங்கோல் மற்றும் கூடூர் சந்திப்பு ஆகிய முக்கிய நிலையங்களில் ரயில் நிற்கும். ஹவுராவிலிருந்து இந்த ரயில் இரவு 10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 1 மணிக்கு சென்னைக்கு வந்து சேரும். அதேபோல், சென்னையிலிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு ஹவுராவை அடுத்த நாள் இரவு 8.30 மணிக்கு அடையும்.
வாரத்தில் இரண்டு முறை இயக்கப்படும் இந்த ரயில், அதிகபட்சமாக மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தை எட்டும். இதில் ஸ்லீப்பர் கிளாஸ் மற்றும் பொது பெட்டிகள் கொண்டிருக்கும். ஹவுரா முதல் சென்னை வரை ஸ்லீப்பர் கிளாஸ் கட்டணம் ரூ.800 ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்கப்படும் திகதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.