முன்னாள் இந்தியக் குடிமைப்பணி அதிகாரியான சகாயம் அவர்களுக்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பது தொடர்பான செய்தி தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நேர்மையின் அடையாளமான சகாயம் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லாதது வருத்தத்தை ஏற்படுத்தும் எனவும், தமிழக அரசு உடனடியாக பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2012 மே 19ஆம் தேதி, மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது சகாயம் அவர்கள் மாநில தொழில் துறையின் முதன்மைச் செயலருக்கு கடிதம் எழுதி, 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான கிரானைட் ஊழலை வெளிக்கொணர்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஊழல் தொடர்பாக பல அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சென்னை உயர்நீதிமன்றம் 2014 செப்டம்பர் 11ஆம் தேதி அவரது தலைமையில் விசாரணைக்குழு அமைக்க உத்தரவிட்டது.
சகாயம் 2013 மார்சில் தான் கொல்லப்படலாம் என்ற அச்சுறுத்தல்களைப் பற்றி முதலமைச்சர் அலுவலகத்தில் முறையிட்டார். அதன்பின் 2014 ஆம் ஆண்டு அவருக்கு ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் படையினர் நியமிக்கப்பட்டனர். ஆனால் திமுக அரசு 2023 மே மாதத்தில் இந்த பாதுகாப்பை திரும்பப்பெற்றது என்பது கேள்விக்குறி ஏற்படுத்துகிறது.
சீமான் தனது அறிக்கையில், திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் சில பிரபலங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் நிலையில், உண்மையை வெளிக்கொணரும் சகாயம் அவர்களை பாதுகாப்பின்றி விட்டது கடும் நியாயக்கேடாகும் என கூறியுள்ளார். அண்மையில் நீதிமன்ற அழைப்பாணைக்கு பதிலளிக்க அவர் தயக்கம் காட்டியதற்கு காரணமாகவும், தொடர்ச்சியாக வரும் அச்சுறுத்தல்களே உள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஆர்வலர்கள் ஜெகபர் அலி மற்றும் ஜாகிர் உசேன் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவங்கள், சகாயம் மீது ஏற்படும் ஆபத்தின் தீவிரத்தைக் காட்டுவதாகவும், தமிழக அரசு உடனடியாக அவருக்கு சிறப்புப் பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து வளக்கொள்ளைக்கு எதிராகவும், இயற்கை வளங்களை பாதுகாக்கவும் சகாயம் மேற்கொண்ட முயற்சிகளை மக்கள் உறுதுணையாக ஆதரிக்க வேண்டிய நேரம் இது எனவும், சமூக விரோதிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் சீமான் தெரிவித்துள்ளார்.