சென்னை : மெய்யழகன் இயக்குனருக்கு அவர் ஆசைப்பட்ட தார் ரோக்ஸ் ரக காரை பரிசாக அளித்துள்ளனர் நடிகர் சூர்யாவும், நடிகர் கார்த்தியும்.
’96’ என்ற உணர்வுப்பூர்வமான காதல் காவியத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் இயக்குநர் பிரேம்குமார். இவர் சமீபத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான ‘மெய்யழகன்’ திரைப்படத்தையும் இயக்கி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது.
தற்போது ’96’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க பிரேம்குமார் தயாராகி வரும் நிலையில், நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் இயக்குனர் பிரேம்குமாருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில், செய்துள்ள ஒரு செயல் பலரது மனதையும் தொட்டுள்ளது.
பிரேம்குமாருக்கு வெள்ளை நிற மஹிந்திரா தார், குறிப்பாக தார் ரோக்ஸ் ரக காரை பரிசாக அளித்துள்ளனர் பிரேம்குமார் எப்போதோ விரும்பியிருந்த அதே காரின் புகைப்படத்தை சூர்யா அவருக்கு அனுப்பி, “வந்துவிட்டது” என்று ஒரு எளிய ஆனால் வலிமையான செய்தியை அனுப்பினார். உண்மையான ஆச்சரியம் பிரேம்குமாருக்காக சூர்யாவின் இல்லமான லட்சுமி இல்லத்தில் காத்திருந்தது. அவர் அங்கு சென்றதும், அந்த பளபளப்பான வெள்ளை நிற தார் கார் கம்பீரமாக நிற்பதை கண்டு ஆச்சரியப்பட்டார்.
அதற்கு அருகில் கார்த்தி நின்று கொண்டிருந்தார். அவர் பிரேம்குமாரின் கையில் காரின் சாவியை கொடுக்க, ஒரு கணம் திகைத்து நின்றார். அந்த சகோதரர்கள் அவருக்கு ஒரு பரிசை மட்டுமல்ல, அவரது நீண்ட நாள் ஆசையையும் நிறைவேற்றியிருந்தனர். அந்த உணர்ச்சிப்பூர்வமான தருணத்தில் பிரேம்குமாவுக்கு பேச வார்த்தைகள் வரவில்லை.
இந்த நெகிழ்ச்சியான அனுபவத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பிரேம்குமார், இதனை வெறும் பரிசாக பார்க்கவில்லை, தனது இரண்டு மூத்த சகோதரர்கள் நிறைவேற்றிய கனவாக பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.