சென்னை: தமிழக அரசு, 2030ல், 1 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை எட்ட திட்டமிட்டுள்ளது.இந்த இலக்கை எட்ட, நபார்டு வங்கி உதவ வேண்டும் என, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் வேண்டுகோள் விடுத்தார்.
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் (நபார்டு) 43வது நிறுவன தினம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் பேசியதாவது: கிராமங்களில் அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்புகளை உருவாக்குவதிலும், ஊரக பொருளாதார வளர்ச்சியிலும் நபார்டு வங்கி முக்கிய பங்கு வகிக்கிறது.
தமிழகத்தில் உள்ள 4,454 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் ரூ.195 கோடியில் கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசு, 2030ல், 1 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.இந்த இலக்கை அடைய, தமிழக அரசுக்கு, நபார்டு வங்கி உதவ வேண்டும். இந்த வங்கி தொடங்கப்பட்ட நோக்கத்தில் இருந்து விலகக் கூடாது. வணிக நோக்கத்திற்காக ஒருபோதும் செயல்படாதீர்கள். இவ்வாறு அமைச்சர் பெரிய கருப்பன் பேசினார்.
நபார்டு வங்கியின் தமிழ்நாடு மண்டல பொது மேலாளர் ஆர்.ஆனந்த் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் நபார்டு வங்கி ரூ.1.67 லட்சம் கோடி கடன் வழங்கியுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் தொழில் வளர்ச்சிக்கு 265 கோடி கடன்.
கிராமப்புற கட்டுமான மேம்பாடு மற்றும் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க தமிழக அரசுக்கு ரூ.36 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதில் நீர்பாசன திட்டங்களுக்கு மட்டும் ரூ.900 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 25 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெற்று, ஆண்டுக்கு, 6.25 லட்சம் டன் உணவு தானியங்கள் பெறப்பட்டுள்ளன.
கிராம சாலைகள் மற்றும் பாலங்கள் அமைக்க ரூ.12,300 கோடி நிதியும், 73 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. கிராமப்புற கிடங்குகள் மற்றும் குடிநீர் திட்டங்களுக்கு ரூ.5,300 கோடி வழங்கப்பட்டது. இதனால் தமிழக அரசு 78 லட்சம் மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குகிறது. நபார்டு வங்கி இந்த ஆண்டு தமிழக அரசுக்கு ரூ.8.3 லட்சம் கோடி வழங்க உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
உணவு மற்றும் கூட்டுறவுத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன், தமிழ்நாடு ரிசர்வ் வங்கி மற்றும் புதுச்சேரி மண்டல இயக்குனர் உமா சங்கர் ஆகியோர் பேசினர். நபார்டு வங்கியின் நடப்பு ஆண்டுக்கான செயல் திட்டங்கள் குறித்த புத்தகத்தை அமைச்சர் வெளியிட்டார்.