தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற ஓ. பன்னீர்செல்வத்தின் தம்பி மற்றும் முன்னாள் நகராட்சி தலைவர் ஓ. ராஜாவின் குடும்பத்தினர் கடந்து சென்ற காரை குறிவைத்துத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓ. ராஜா கடந்த அதிமுக ஆட்சியில் ஆவின் நிர்வாகக் குழுவின் தலைவராகவும் இருந்துள்ளார்.
இந்தச் சம்பவம், தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே வேல்நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. காரில் ஓ. ராஜாவின் குடும்பத்தினர் பயணித்துக் கொண்டிருந்த போது எதிர்திசையில் வந்த ஆட்டோ ஒன்று திடீரென சாலையோரத்தில் நின்றது. அதில் இருந்து இருவர் இறங்கியவுடன் கீழே கிடந்த கல்லை எடுத்து காரின் முன்பக்க கண்ணாடி மீது வீசினார்.
கண்ணாடி உடைந்து நொறுங்கியதாகக் கூறப்படுகிறது. சம்பவத்தின் போது காரில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது நன்மை. கார் ஓட்டிச் சென்ற லட்சுமணன், ஆட்டோவில் இருந்து இறங்கிய மர்ம நபர்களிடம் கேள்வி எழுப்பிய போது, அவர் மீது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் ஆட்டோவில் ஏறி தப்பியோடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் லட்சுமணன் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கினர். விசாரணையின் அடிப்படையில் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த பிரசாந்த் (வயது 35) என்பவர் கைது செய்யப்பட்டார். மற்றொரு நபர் தலைமறைவாக உள்ள நிலையில், அவரையும் தேடிவருகிறார்கள்.
கார் மீது கல் வீசியதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தேவதானப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.