2024-ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக அறிமுகமான இளம் வேகப்பந்து வீச்சாளராக மாயங்க் யாதவ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி அவர் காட்டிய செயல்திறன், எதிராளிகளுக்கு அச்சுறுத்தலாக இருந்தது. மிகச் சில போட்டிகளிலேயே வாய்ப்பு கிடைத்தாலும், அந்த சிறந்த பவுலிங் காரணமாக அவர் இந்திய அணிக்காகவும் சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமானார்.

இந்த சாதனைகளை தொடர்ந்து, 2025-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பே லக்னோ அணி அவரை ரூ.11 கோடிக்கு தக்கவைத்தது. ஆனால் தொடரின் தொடக்கத்திலேயே ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் தொடக்கப்போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை. தேசிய கிரிக்கெட் அகாடெமியில் சிகிச்சையும், பயிற்சியும் மேற்கொண்ட அவர் தொடரின் நடுப்பகுதியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளை எதிர்கொண்டார்.
இந்த இரண்டு போட்டிகளிலும் அவர் மிகவும் கீழ்மட்ட பவுலிங் செய்து 100 ரன்கள் கசிய விட்டதோடு, வெறும் 2 விக்கெட்டுகள் மட்டுமே கைப்பற்ற முடிந்தது. கடந்த ஆண்டு மணிக்கு 150 கிமீ வேகத்தில் பந்துவீசிய மாயங்க், தற்போதைய பவுலிங் ஆக்ஷனிலும் வேகத்திலும் சரிவை சந்தித்து 140 கிமீ வேகத்தில் மட்டுமே பந்துவீசியதாக தெரிகிறது. இதற்கு காரணம் அவரது மீளாத காயமும் ஆகலாம்.
தற்போது, மீண்டும் ஏற்பட்ட காயம் காரணமாக மாயங்க் யாதவ் 2025 ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். லக்னோ அணி அவருக்கு பதிலாக நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளரான வில்லியம் ரூர்கியை மாற்று வீரராக இணைத்துள்ளது. இந்திய அணியின் எதிர்கால வேகப்பந்து நம்பிக்கையாக கருதப்பட்ட மாயங்க், இரண்டு ஆண்டுகளில் மூன்று முறை காயம் ஏற்படுவதால் அவரது ஓயாத மெகா வரவேற்பும், வளர்ச்சியும் சந்தேகத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்த நிலை அவரது கிரிக்கெட் பயணத்தின் தொடர்ச்சியை பாதிக்கக்கூடும் என கிரிக்கெட் வட்டாரத்தில் கவலையுடன் பேசப்படுகிறது.