இந்தியன் ஆயில் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் 6 மே 31-ம் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது. இந்த சீசனில் பங்கேற்கும் 8 அணிகள் 23 டைகளில் போட்டியிடும். தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நடப்பு சாம்பியனான டெம்போ கோவா சேலஞ்சர்ஸ் அணி, இரவு 7.30 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் அகமதாபாத் எஸ்ஜி பைப்பர்ஸை எதிர்கொள்ளும்.

ஜூன் 2-ம் தேதி நடைபெறும் போட்டியில் சென்னை லயன்ஸ் அணி, அறிமுக அணியான கொல்கத்தா தண்டர்பிளேட்ஸை எதிர்கொள்ளும். லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் ஐந்து டைகளில் விளையாடும். ஒவ்வொரு டையும் 5 போட்டிகளைக் கொண்டிருக்கும். ஒரு டையில் 2 ஆண்கள் ஒற்றையர், 2 பெண்கள் ஒற்றையர் மற்றும் 1 கலப்பு இரட்டையர் ஆகியவை இடம்பெறும்.
லீக் கட்டத்திற்குப் பிறகு, புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும். அரையிறுதிப் போட்டிகள் ஜூன் 13 மற்றும் 14-ம் தேதிகளில் நடைபெறும். வெற்றி பெறும் அணிகள் ஜூன் 15-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் போட்டியிடும்.