சென்னை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி, டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்தார்.
2026 சட்டப்பேரவை தேர்தல்தான் இலக்கு என்றும் அறிவித்தார். 2 கோடி உறுப்பினர் சேர்க்கைக்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதற்கிடையே, ‘தி கோட்’ என்ற படத்தில் விஜய் தற்போது நடித்து வருகிறார். செப்டம்பரில் இப்படம் திரைக்கு வர உள்ளது. படத்தில் அவரது பணிகள் முடிந்துவிட்டதாக கூறப்படும் நிலையில், கட்சி பணிகளில் அவர் தீவிரம் காட்டி வருகிறார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு, கட்சி கொடி அறிமுகம் செய்வது ஆகியவை குறித்து, கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்துடன் விஜய் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில், ‘தி கோட்’பட வெளியீட்டுக்கு பிறகு மாநாட்டை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், மாநாட்டுக்கு முன்பாக, கட்சியின் கொடியைவிஜய் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2009-ம் ஆண்டு விஜய் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி, இயக்கத்தின் கொடியை ஜூலை 26-ம் தேதி அறிமுகம் செய்தார். அதேபோல, தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியையும் ஜூலை 26-ம் தேதிஅறிமுகம் செய்ய விஜய் திட்டமிட்டுள்ளதாக நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனாலும்,இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கப்படவில்லை.