உலகம் முழுவதும் திரைப்பட தயாரிப்பு முறைகள் கடந்த சில வருடங்களில் கடுமையாக மாறியுள்ளன. பெரிய நிறுவனங்களின் ஆதரவு இல்லாமல் தான் விரும்பும் கதைகளை திரைப்படமாக்க நினைக்கும் அறிமுக இயக்குநர்கள், தற்போது ‘கிரவுட் பண்டிங்’ எனப்படும் கூட்டுத் தயாரிப்பு முறைபடி புதிய வழியைத் தேர்ந்தெடுத்துள்ளனர். நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சினிமாவை விரும்பும் மக்களின் நிதியுதவியை அடிப்படையாகக் கொண்டு குறைந்த பட்ஜெட்டில் படங்களை உருவாக்குவது தற்போது ஒரு முக்கியமான இயக்கமாக மாறியுள்ளது.
இந்த புதிய போக்கில் தமிழ் சினிமாவிலும் புதிய முயற்சியாக உருவாகி இருக்கும் படம் தான் ‘மனிதர்கள்’. நீண்ட கால இடைவெளிக்கு பிறகு கூட்டுத் தயாரிப்பு முறையில் உருவாகும் இந்த படம் சமீபத்தில் வெளியான போஸ்டரின் மூலமாகவே பார்வையாளர்களின் கவனத்தை பெற்றுள்ளது. அறிமுக இயக்குநர் ராம் இந்திரா இயக்கும் இப்படம், ஒரே நாள் இரவில் நடைபெறும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
படத்திற்கு ஒளிப்பதிவை அஜய் ஆபிரஹாம் ஜார்ஜ் மேற்கொள்கிறார். இசையமைப்பாளராக அனிலேஷ் எல் மேத்யூ பணியாற்றுகிறார். ‘ஸ்டூடியோ மூவிங் டர்டிள்’ மற்றும் ‘கிரிஷ் பிக்சர்ஸ்’ ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. இதில் முக்கிய கதாபாத்திரங்களில் கபில் வேலவன், தக்ஷா, அர்ஜுன் தேவ், சரவணன், குணவந்தன் மற்றும் சாம்பசிவம் நடித்துள்ளனர்.
படத்தின் முக்கிய சிறப்பம்சம் என்னவெனில், இதில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் பெரும்பாலும் புதுமுகங்கள் ஆவர். இதன்மூலம் புதிய திறமைகளுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதை இந்த திரைப்படம் நிரூபிக்கிறது. தொழில்நுட்ப தரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் இப்படம், குறைந்தபட்ச வசதிகளுடன் தரமான படம் எடுக்கும் முயற்சிக்கு ஓர் எடுத்துக்காட்டு என்றே கூறலாம்.
‘மனிதர்கள்’ திரைப்படம் எந்தவிதமான பெரிய விளம்பரமோ பிரபல நடிகர்களோ இல்லாமல், தரமான கதையும், அசல் கதாபாத்திரங்களும் மூலம் பார்வையாளர்களை ஈர்க்கும் நோக்கில் உருவாகி வருகிறது. இது போல புதிய சிந்தனைகளும், சுயாதீன முயற்சிகளும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வளர வேண்டும் என்பதற்கான முக்கிய கட்டமாக இந்த படம் இருக்கலாம். படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.