
2015 ஆம் ஆண்டு பீப் சாங் சர்ச்சையில் சிக்கிய சிம்பு அதனால் பெரும் பிரச்சனைகளை எதிர்கொண்டார். பலரும் அவருக்கு எதிராக பேசினர். அந்த நேரத்தில் தான் சிம்புவிற்கு இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உறுதுணையாக வந்தார். சமீபத்தில் நடைபெற்ற தக்லைப் இசை வெளியீட்டு விழாவில் சிம்பு இதைப் பற்றி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.

பீப் சாங் சர்ச்சையின் போது, சிம்பு ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். சிம்பு மீது எழுந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில், அவர் மீண்டும் திரும்ப வேண்டும் என்பதற்காக ரஹ்மான் “தள்ளிபோகாதே” என்ற பாடலை உருவாக்கினார். அதன் மூலம் வெளியான டீசர், சிம்புவுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்க காரணமாக இருந்தது.
இந்த உதவியை சிம்பு ஒருபோதும் மறக்கமாட்டேன் என கூறினார். ரஹ்மானிடம் மிகவும் நெகிழ்ச்சியுடன் தனது நன்றியை தெரிவித்துள்ளார். மேலும் சிம்பு ஒரு பாடகராக 150-க்கும் மேற்பட்ட பாடல்களை பாட காரணமாக ரஹ்மான் தான் என்று தெரிவித்தார். “என் அப்பாவிற்கு பிறகு என்னை பாடவைத்தவர் ரஹ்மான் தான்” என உணர்ச்சிபூர்வமாக கூறியுள்ளார்.
இவர்கள் இருவரின் கூட்டணி தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விண்ணைத்தாண்டி வருவாயா, செக்க சிவந்த வானம், வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்களில் இவர்களின் சேர்க்கை வெற்றி பெற்றுள்ளது. தற்போது மணிரத்னம் இயக்கிய தக்லைப் படத்திலும் இவர்களின் கூட்டணி மீண்டும் ஒர்கவுட் ஆகியுள்ளது.
தக்லைப் படத்தில் ஜிங்குச்சா பாடல் மற்றும் பிற பாடல்கள் ரசிகர்களிடையே மாஸ் ஹிட்டாகியுள்ளது. ரஹ்மானின் இசை, சிம்புவின் படங்களுக்கு ஒரு விசேஷமான வகையில் பேசப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
சிம்பு தன் சிறு வயதில் ரஹ்மானுக்கு தொந்தரவு கொடுத்த சம்பவங்களையும் நகைச்சுவையுடன் கூறினார். அந்த எல்லாமே அவர் பொறுத்துக்கொண்டார் என்றும் ரஹ்மானின் பெருமையை பேசினார். மேலும், ரஹ்மான் தன் ஆரம்ப காலங்களில் சிம்புவின் தந்தை டி. ராஜேந்தருடன் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் நட்பும், கலையும் தமிழ் சினிமாவில் இன்று வரை இடம் பெற்றிருப்பது மனதுக்கு மகிழ்ச்சி தருகிறது.