ஐபிஎல் 2025 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி சாம்பியன் பட்டத்தை வென்று பெரும் சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றியின் முக்கியமான பங்குதாரராக இருந்து, 18 ஆண்டுகளாக கோப்பை கனவில் வைத்திருந்த வீரர் விராட் கோலி, தனது கனவை நனவாக்கியுள்ளார். ஆரம்ப சீசனிலிருந்து அணியின் ஒரு உறுதியான பகுதியாய் விளங்கிய அவர், பல ஆண்டுகள் மாற்றங்களுக்கும் நடுவில் அணியில் நிலைத்திருந்த ஒரே வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி கைந்ததும் மைதானத்தில் கோலி பெரிதும் உணர்ச்சிவசப்பட்டார். போட்டியின் கடைசி பந்துக்குப் பிறகு அவர் மைதானத்தில் நிற்கவே, அங்கையே தரையில் குந்திகொண்டு வணங்கி, கண்ணீர் வடித்தார். வெற்றியின் ஆனந்தத்தில் கட்டுப்பாடிழந்த கோலி, உடனே மனைவி அனுஷ்கா ஷர்மாவை அணைத்துக்கொண்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்தார். அனுஷ்காவும், கணவனுக்கு முத்தமிட்டு வாழ்த்து தெரிவித்தார்.
ஆர்சிபி வீரர்கள் மைதானத்தில் வெற்றியை கொண்டாட, ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் வீரர்களும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஏபி டிவில்லியர்ஸ் இந்த வெற்றியில் மிகுந்த மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டார். காலத்தால் பிரிந்தும் உணர்வால் இணைந்த தோழனின் வெற்றியில் அவரும் நெகிழ்ந்தார். அத்துடன், ஆர்சிபியின் இன்னொரு முன்னாள் வீரர் கிறிஸ் கெய்லும் மைதானத்தில் இருந்தார். கோலியையும் மற்ற வீரர்களையும் கட்டிப்பிடித்து வெற்றியைப் பகிர்ந்துகொண்டார்.
போட்டியின் கடைசி ஓவரில் ஜோஷ் ஹேசல்வுட் சற்றே தடுமாறினார். பஞ்சாப் அணியின் சஷாங்க் சிங் சிக்ஸர்கள் அடித்து போராடினார். ஆனால் ஆர்சிபி வெற்றியை ஏற்கனவே உறுதிப்படுத்தி விட்டது. இறுதி பந்திற்குப் பிறகே கொண்டாட்டம் வெடித்தது.
இந்த வெற்றி, கோலி மற்றும் ஆர்சிபி ரசிகர்களுக்கு மிகப்பெரிய நெஞ்சார்ந்த வெற்றி. பல வருடக் காத்திருப்புக்குப் பின் கிடைத்த இந்த பெருமை, இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் சுவடுகளாகத் திகழும்.