இஸ்லாமாபாத்: இந்தியா–பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தின் போது, இந்தியா மேற்கொண்ட துல்லியமான தாக்குதலில் பாகிஸ்தானின் முக்கிய நூர் கான் விமான தளத்தில் பெரிய அளவிலான சேதம் ஏற்பட்டது. இந்த தாக்குதலுக்குப் பிறகு தான் பாகிஸ்தான் தன்னிலை இழந்து, மோதலை நிறுத்துவதாக அறிவித்தது. இந்நிலையில், இந்தியா தாக்கிய அதே விமான தளம் தற்போது அமெரிக்க கட்டுப்பாட்டில் இருப்பதாக பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மோதலுக்குப் பின்புலமாக ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இந்தியா மே 7ம் தேதி நள்ளிரவில் “ஆபரேஷன் சிந்தூர்” எனும் ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. இதன் கீழ் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. மூன்று நாட்களுக்குள் பாகிஸ்தானின் 12 முக்கிய ராணுவ மற்றும் விமான தளங்கள் ஏவுகணை தாக்குதலுக்கு இலையாகின.
இந்த தாக்குதல்களில் மிக முக்கியமான இலக்காக இருந்தது ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமான தளம். இது பாகிஸ்தானின் ராணுவ தலைமையகத்திற்கு அருகில் அமைந்துள்ளதோடு, தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து வெறும் 10 கி.மீ. தூரத்தில் உள்ளது. இங்கு பாகிஸ்தானின் அணுஆயுத கண்காணிப்பு மையம் மற்றும் விமானப்படை ரீதியான முக்கிய கட்டுப்பாட்டு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த தளத்தில் இருந்து சி–130 ஹெர்குலஸ் மற்றும் எல்–78 வகை எரிபொருள் நிரப்பும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. மேலும், இது பிஏஎஃப் பயிற்சி கல்லூரி மற்றும் பனாசிர் பூட்டோ சர்வதேச விமான நிலையத்தையும் உள்ளடக்கியது. இந்த விமானத் தளத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு இந்தியா துல்லியமாக இதை குறிவைத்து தாக்கியது.
இந்நிலையில், இந்த விமான தளம் தற்போது பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இல்லையென்று தகவல்கள் கூறுகின்றன. பாதுகாப்பு விஞ்ஞானியாக அறியப்படும் இம்தியாஸ் குல் தனது வீடியோவில், “நூர் கான் விமானதளம் தற்போது அமெரிக்க கட்டுப்பாட்டில் உள்ளது. பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுக்கே அதில் நுழைய அனுமதி இல்லை. அமெரிக்க விமானங்கள் அங்கு இயங்கி வருகின்றன. வெளிப்படைத்தன்மையின்றி அது செயல்படுகிறது” எனக் கூறியுள்ளார்.
அதாவது, பாகிஸ்தானுக்கே சொந்தமான விமான தளம் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படும் இச்செய்தி, பாகிஸ்தான் அரசியலில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நாட்டின் முக்கிய பாதுகாப்பு மையம் மற்றொரு நாட்டின் வசம் இருப்பது பாகிஸ்தானின் இறையாண்மை மீது கேள்வி எழுப்புகிறது.
இந்த பரபரப்பான தகவல் சரி என்றால், பாகிஸ்தானின் ராணுவம், விமானப்படை மற்றும் அரசாங்கத்திற்குள் அதிர்ச்சியும், நம்பிக்கை இழப்பும் ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை. கடந்த சில ஆண்டுகளில் பாகிஸ்தானின் உள்நாட்டு சூழ்நிலையும், சர்வதேச ஆதாரங்களில் அதன் சுதந்திரமும் தொடர்ந்து சிக்கலுக்கு உள்ளாகி வரும் சூழலில், இம்மாதிரியான தகவல்கள் அதன் நிலையை மேலும் தொலைத்துவிடும் என்பதே சாத்தியமாகிறது.