ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் சாம்பார் நகரத்தில் மக்கள் தற்போது ஒரு மாபெரும் முடிவை எடுத்து வருகின்றனர். அந்த நகரின் பல வீடுகளில் “விற்பனைக்கு” என்ற அறிவிப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த நகரத்தில் ஒரே நேரத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட வீடுகள் விற்பனைக்கு வந்துள்ளன என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைமுறை தலைமுறையாக வசித்து வந்தவர்களே தற்போது அப்பகுதியிலிருந்து வெளியேற தயாராகி வருவதன் பின்னணியில் ஒரு கோரமான உண்மை இருக்கிறது.

இப்போதும் இந்தியாவில் ரியல் எஸ்டேட் சந்தையில் நகரங்கள் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கின்றன. ஆனால், ஒரே நேரத்தில் ஒரு முழு ஊர் விற்பனைக்கு வருவது மிக அரியதுதான். இது போன்ற அபூர்வமான சூழ்நிலையை சாம்பார் நகரம் இன்று சந்தித்து வருகிறது. இதற்கு காரணம் அங்குள்ள குடிநீர் தட்டுப்பாடு. சாம்பார் நகரம் உப்பு உற்பத்திக்கும், புலம்பெயர்ந்த பறவைகளுக்குப் புகழ்பெற்றதுமான இடமாக இருந்தாலும், தற்போது தண்ணீர் பஞ்சம் காரணமாக மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.
அந்த நகரில் ஒட்டப்பட்ட போஸ்டர்களில், “தண்ணீர் பற்றாக்குறை காரணமாக இந்த வீடு விற்பனைக்கு” என்று நேரடியாக எழுதப்பட்டுள்ளது. ஒரே தெருவில் ஒட்டுமொத்த வீடுகளும் இந்த நிலையில் இருக்கின்றன. ஹரி கிஷன் பரிக் என்ற நபர், தன் வீட்டின் சுவரில் போஸ்டர் ஒட்டி, “தண்ணீர் இல்லாமல் இங்கு வாழ முடியவில்லை” என தன் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
சாம்பார் நகரம் ஜெய்ப்பூரிலிருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அங்குள்ள வார்டு 22 மற்றும் 23 பகுதிகளில் பழமை வாய்ந்த வீடுகள் நிறைந்துள்ளன. அந்த வீடுகளில் சில 200 ஆண்டுகள் பழமையானவை. அவை தவிர மற்ற வீடுகளும் தங்கள் சந்ததிகளுடன் வாழ்க்கையை தொடர்ந்து வந்தவையாகும். ஆனால் தற்போது தண்ணீர் கிடைக்காத நிலையால் மக்கள் அவற்றை விற்றுவிட்டு நகரம் விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளனர்.
இந்த பிரச்சனையை உணர்த்தும் வகையில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் நகரம் முழுக்க பரவியுள்ளன. மக்கள் தங்கள் வீடுகளை விற்பனை செய்துவிட்டு, குடிநீர் கிடைக்கும் இடங்களுக்கு குடிபெயர்ந்து செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதற்காக அவர்கள் அரசுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் மறு முறை மனுவும் அளித்துள்ளனர்.
உள்ளூர் பாஜக கவுன்சிலர் கௌதம் சிங்கானியா, கடந்த ஏழு ஆண்டுகளாக வீடுகளுக்கு குழாய் தண்ணீர் சப்ளை கிடைக்கவில்லை எனக் கூறியுள்ளார். இதனால் சுமார் 200 குடும்பங்கள் ஒன்றிணைந்து இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நகரில் முந்தைய எண்ணிக்கையான 3,500 மக்களில் தற்போது வெறும் 1,700 பேர் மட்டுமே இருப்பதாகவும், மற்றவர்கள் நகரத்தை விட்டு வெளியேறிவிட்டதாகவும் அவர் கூறினார்.
இப்போது உள்ள மக்கள் மீதும் இந்த தண்ணீர் சிக்கல் அதீத அழுத்தத்தை ஏற்படுத்தி வருவதால், மீதமுள்ளவர்களும் விரைவில் நகரத்தை விட்டு வெளியேற உள்ளனர். இது தண்ணீர் பற்றாக்குறை சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை சுட்டிக்காட்டும் நேரடி எடுத்துக்காட்டாக இருக்கிறது.