காசாவில் நிலவும் உள்நாட்டுப் போர் சூழ்நிலையில், இனி ஒரு சம்பவம் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. காசாவின் தெற்கு ரஃபா பகுதியில் உள்ள GHF மனிதாபிமான உதவி மையம் அருகே, இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பாலஸ்தீனிய பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் நிவாரண உணவுப் பொருட்களை பெற வரிசையில் காத்திருந்தபோது, சந்தேகத்தின் பேரில் ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டதாகப் தெரிவிக்கப்பட்டுள்ளது.

GHF அமைப்பின் உதவி மையங்கள், இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆதரவுடன் சமீபத்தில் நிறுவப்பட்டுள்ளன. ஆனால் அந்த மையங்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு பிறகு அந்த இடங்கள் போர் மண்டலமாகக் கருதப்படும் என்பதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று அதிகாலை, மக்கள் GHF மையம் அருகே அதிகமாக திரண்டிருந்தனர். உணவுக்காக நீண்ட நேரம் காத்திருந்த மக்கள், ராணுவத்தின் எச்சரிக்கையை புறக்கணித்தனர். இதனைத் தொடர்ந்து ராணுவம், கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சாட்சியங்கள் தெரிவிக்கின்றன. இதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது GHF மையங்கள் அருகே நடந்த முதல் சம்பவம் அல்ல. கடந்த வாரங்களிலும் இதுபோன்ற தாக்குதல்களில் பல உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. உதவி பெற வருகிற மக்களுக்கு இது ஒரு புதிய அச்சுறுத்தலாகவே மாறியுள்ளது. இஸ்ரேல் ராணுவம் இதற்குப் பதிலளிக்கையில், “சிலபேர் அச்சுறுத்தலாக இருந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டது, ஆனால் உயிரிழப்புகள் மிக குறைவாகவே இருக்கின்றன” என தெரிவித்துள்ளது.
காசாவில் மனிதாபிமான உதவிகளை ஐநா வழியாக வழங்கியிருந்த நிலையை மாற்ற, GHF மையங்களை இஸ்ரேல் உருவாக்கியது. ஆனால் இந்த மையங்கள் தொடங்கப்பட்ட முதல் மூன்று நாட்களிலேயே 60க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
உதவிக்காக வரிசையில் நின்ற மக்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகப் பெரும்பாலான சாட்சியங்கள் தெரிவித்துள்ள நிலையில், தற்போது மீண்டும் நான்கு உயிர்கள் பலியாகியுள்ளன. இது காசா மக்கள் மீதான மனிதாபிமான மீறலாகவும், GHF மையங்களின் செயல்திறன் மீதான கேள்வியாகவும் மாறியுள்ளது.