அகமதாபாத்திலிருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானம் கடந்த ஜூன் 12ம் தேதி ஏற்பட்ட விபத்தில் 241 பேர் உயிரிழந்தது, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தாக்கம் மற்றும் உயிரிழப்பின் பின்னணி குறித்து மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

விபத்துக்கான காரணத்தை கண்டறியும் நோக்கில், விமானத்தின் கருப்பு பெட்டி அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனுடன், ஏர் இந்தியாவின் வருகை மற்றும் செயல்பாட்டு பதிவுகள் பரிசோதிக்கப்பட, பல விதிமீறல்கள் நடந்திருப்பது வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, ஏர் இந்தியாவைச் சேர்ந்த மூன்று முக்கிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களுக்கெதிரான நடவடிக்கை தொடர்பான அறிக்கையை 10 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் DGCA கேட்டுள்ளது.
மேலும், கடந்த மே 16 மற்றும் 17ம் தேதிகளில் பெங்களூருவில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட விமானங்களில், விமானிகள் ஒதுக்கப்பட்ட நேரத்தை மீறி நீண்ட நேரம் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், இது பாதுகாப்பு விதிமீறலாக கருதப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஏர் இந்தியாவுக்கு நோட்டீஸ் அனுப்பி, விளக்கம் கோரியுள்ளது. எதிர்காலத்தில் மீண்டும் இவ்வாறான முறைகேடுகள் நிகழ்ந்தால், அபராதம், உரிமம் ரத்து, அனுமதி நீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என DGCA எச்சரித்துள்ளது.
விமான போக்குவரத்து துறையில் நியமங்கள், பயணிகள் பாதுகாப்பு, நேர ஒழுங்கு உள்ளிட்டவை மீறப்படுவது, நாடு முழுவதும் விமானப்பயணிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.