மத்திய கிழக்கு நாடுகளில் சூழ்நிலை தீவிரமாகி வருகிறது. அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்களை விமானங்களால் தாக்கியதைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சீராக உயர்வதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் கணிக்கின்றனர்.
அமெரிக்காவின் தாக்குதலால் ஈரான் கடுமையாக பதிலடி எடுக்கும் நிலை உருவாகியுள்ளதால், வர்த்தக ரீதியில் பதற்றம் உருவாகியுள்ளது. இது தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக பார்க்கும் நபர்களை அதிக அளவில் ஈர்க்கிறது.

ஆக்சிஸ் செக்யூரிட்டிஸ் நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, ஸ்பாட் தங்கத்தின் விலை 3,314 டாலரை கடந்துவிட்டால், அது 3,770 டாலருக்கு உயர வாய்ப்புள்ளதாகவும், வெள்ளி 40 டாலரை எட்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் மட்டும் தங்கத்தின் விலை 25% உயர்ந்துள்ளதுடன், வெள்ளியும் 24% வரை ஏறியுள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய சந்தையிலும் தங்கம், வெள்ளி விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் சென்னையில் 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹9,235-க்கு விற்கப்பட்டது. சில்லறை வணிகத்தில் செய்கூலி, ஜிஎஸ்டி, சேதாரம் ஆகியவை சேரும் என்பதால் பொதுமக்களுக்கு செலவு கூடுகிறது.
போர் நிலை தொடரும் வரை தங்கம் மற்றும் வெள்ளி விலையில் வீழ்ச்சி எதிர்பார்க்க முடியாது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.