மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோசமான நிலைமை உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அமெரிக்கா ஈரானில் உள்ள மூன்று முக்கிய அணுசக்தி மையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது, அந்த தாக்குதலில் போர்டோ, இஸ்பஹான் மற்றும் நடான்ஸ் உள்ளிட்ட மையங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இந்த தாக்குதலுக்கு பல நாடுகள் அதிருப்தியும், கவலையும் தெரிவித்துள்ளன. சர்வதேச அமைதி மற்றும் நிலைத்தன்மை மீது இது நேரடியாக தாக்கமளிக்கக்கூடிய விடயமாக பார்க்கப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் அதிபர் மசூத் பெசெஸ்கியான் உடன் 45 நிமிடங்கள் தொலைபேசி வழியாக உரையாடினார். இருநாட்டின் தற்போதைய நிலைமைகளை விவாதித்ததோடு, இந்தியா சமாதான முயற்சிகளை ஆதரிக்கும் வகையில் பேச்சுவார்த்தை மற்றும் தூதரக நிலைமைகளில் அமைதி நிலைநாட்டப்பட வேண்டும் என வலியுறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். இது இந்தியா ஒருபோதும் போரை ஆதரிக்காது எனும் வெளிப்பாடாகவும் பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் நடவடிக்கையை சீனா கடுமையாக விமர்சித்துள்ளது. ஐ.நா. மற்றும் சர்வதேச சட்டங்களை மீறி அமெரிக்கா செயல்பட்டுள்ளதாகவும், இது மிகப்பெரிய பேரழிவுக்கான கதவைத் திறந்துவிட்டதாக ரஷ்யாவும் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியா, அமெரிக்கா ஈரானின் இறையாண்மையை முற்றாகக் குழப்பியுள்ளதாக கூறி, தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஓமன், ஈராக் உள்ளிட்ட நாடுகளும் தாக்குதலை முற்றாகத் தவறானதாக விமர்சித்து வருகின்றன.
ஏமனின் ராணுவம் நேரடியாக அமெரிக்க கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது, “உங்கள் கப்பல்கள் உடனடியாக எங்கள் எல்லையை விட்டு விலக வேண்டும்,” எனக் கூறியுள்ளதோடு, அந்தநாட்டின் ஆதரவு ஈரானுக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குத்தரெஸ், இது உலகத்திற்கு பேரழிவாக மாறும் முன் போர் முடிவுக்கு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பாபா 14ஆம் லியோ, போர் தீர்வாக அமையாது எனும் எண்ணத்துடன், காயங்களை பெருக்கக்கூடிய சூழ்நிலையை எதிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.