சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துவருகிறார். முக்கியமாக ஹீரோயின்களை மையப்படுத்திய கதையை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக புலிமடா படம் வெளியானது. அடுத்ததாக கறுப்பர் நகரம், மோகன் தாஸ், தீயவர் குலைகள் நடுங்க போன்ற படங்கள் ரிலீஸாகவிருக்கின்றன. இந்தச் சூழலில் அவர் தனது வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களை எமோஷனலாக பகிர்ந்திருப்பது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது,
ஐஸ்வர்யா ராஜேஷ் இப்போது தமிழ் சினிமாவில் டாப் 10 ஹீரோயின்களில் ஒருவராக இருக்கிறார். தனது கரியரின் ஆரம்பத்திலிருந்தே நல்ல நல்ல கதைகளையும், கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் அவர்; காக்கா முட்டை படத்தில் பெரும் கவனம் ஈர்த்தார். அந்தப் படத்துக்கு பிறகு மேற்கொண்டு நடிகைகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்துவருகிறார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் தனது திறமையை நிரூபித்துவருகிறார்.
இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் போட்காஸ்ட் ஒன்றில் பேசுகையில், “எனது தந்தை அழகாக இருந்தார். அந்த அழகுதான் எனக்கும் கிடைத்திருப்பதாக நினைக்கிறேன். அவர் உயிரிழப்பதற்கு முன்பு மூன்று மாதங்கள் படுத்த படுக்கையாகத்தான் இருந்தேன். நான் முழு நேரமும் அவருடனேயே இருந்தேன். அவர் தனது சகோதரர்களுடன் நெருக்கமாக இருந்தவர். அவரது மரணம் குடும்பத்தையே உலுக்கியது. எப்போதும் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டுமென்றுதான் அம்மா விரும்பினார்.
திரையுலகில் எனக்கு வேதனையான அனுபவங்கள் பல கிடைத்திருக்கின்றன. 10 வருடங்களுக்கு முன்பு ஒரு இயக்குநர் அழைத்தார் என்று சென்றிருந்தேன். முக்கிய வேடம் எனக்கு வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அப்போது அலுவலகத்தில் நான் அமர்ந்திருந்தபோது என்னை பார்த்த அவர்; யார் இந்த பெண் என்று அங்கிருந்தவர்களிடம் கேட்டார். வாய்ப்பு தேடி வந்தேன் என்று நான் சொன்னேன்.
உடனே அவர், இந்தப் பெண் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாகக்கூட இருக்க முடியாது திருப்பி அனுப்பிவிடுங்கள் என்று சொன்னார். அப்படி அவர் சொன்னதை ஒரு ஊக்கமாக நான் எடுத்துக்கொண்டேன். அதேபோல் ஒரு பார்ட்டியில் இன்னொரு இயக்குநரை சந்தித்தேன். அப்போது அவரிடம் எனக்கு ஒரு வேடம் தர முடியுமா என்று கேட்டேன். ஆனால் அவரோ எனக்கு ரொம்பவே மோசமான கதாபாத்திரத்தை வழங்கினார். அவர்களது எண்ணம் என்னவென்று எனக்கு தெரியவில்லை.
காக்கா முட்டை படத்தில் நான் நடித்தபோது எனக்கு டல் மேக்கப்தான். எனது கால் முழுவதும் அழுக்காக இருந்தது. ஆனால் படம் பார்த்தவர்களோ, நீ ரொம்ப அழகாக இருக்கிறாய் என்று சொன்னார்கள். எனது நடிப்பின் மீதும் கவனம் வைத்தார்கள். எனது திறமையால் நல்ல வாய்ப்புகளை பெற்றேன். அந்தக் கதாபாத்திரத்தை என்னால் மட்டுமில்லை தமிழ் பெண்கள் அனைவராலும் சிறப்பாக செய்ய முடியும். ஆனால் அப்படிப்பட்ட வாய்ப்பு பலருக்கு கிடைப்பதில்லை” என்றார்.