கர்நாடகா மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் இருந்து கோலார் வரையிலான நெடுஞ்சாலை போக்குவரத்து நெரிசலால் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக, புறநகர் பகுதிகளில் நாள்தோறும் கனரக வாகனங்கள் மற்றும் தனியார் வாகனங்கள் ஏராளமாக செல்லும் காரணத்தால், பங்காருபேட், முல்பாகல், ஓஸ்கோடே போன்ற பகுதிகளில் வாகனங்கள் மெதுவாக நகரும் நிலை உருவாகியுள்ளது. ஓஸ்கோடே டோல்கேட்டில் மட்டும் தினமும் 45,000 வாகனங்கள் வரை பயணிக்கின்றன. இதனால் இந்த சாலை வழித்தடத்தை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு தேசிய நெடுஞ்சாலைத் துறை, தற்போது உள்ள 4 வழிச் சாலையை 10 வழிச் சாலையாக மாற்றும் திட்டத்தை தயாரித்துள்ளது. மத்தியில் 6 வழித்தடங்கள், இருபுறமும் தலா 2 சர்வீஸ் லேன்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த சாலை திட்டம் பெங்களூருவிலிருந்து ஆரம்பித்து ஆந்திர மாநில எல்லை வரையிலான 69 கிலோமீட்டர் நீளத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர், மேலும் டெல்லியில் இருந்து அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் பல பயன்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. தினசரி போக்குவரத்து நெரிசலில் இருந்து விடுபடுவதோடு, வாகனங்கள் எளிதாக, தடையின்றி நகர இயலும். நரசபுரா உள்ளிட்ட தொழிற்பேட்டைகளில் கனரக வாகனங்கள் சுலபமாக பயணிக்க முடியும். இந்த புதிய சாலை மூன்று மாநிலங்களை (கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா) இணைக்கும் வகையில் உருவாக இருப்பதால், தொழில் வளர்ச்சி மற்றும் முதலீட்டிற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும்.
புதிய நுழைவு மற்றும் வெளியேறும் பாதைகள், கட்டுப்பாடுகள், சர்வீஸ் லேன்கள் போன்ற அமைப்புகள் மூலம் சாலை விபத்துகளை குறைத்து பயணங்களை பாதுகாப்பாக மாற்றும் திட்டமாக இது அமையும். இந்த 10 வழிச்சாலை திட்டம், பெங்களூரு மற்றும் கோலார் ஆகிய பகுதிகளின் வளர்ச்சியில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.