பெங்களூரில் கர்நாடக மாநில அரசு அதிரடியாக 15 வகையான மருந்துகள், மாத்திரைகள், சிரப்புகள் மற்றும் கால்நடை பயன்படுத்தும் தயாரிப்புகள் மீது தடை விதித்துள்ளது. சுகாதாரத்துறை மேற்கொண்ட ஆய்வில் இந்த தயாரிப்புகள் தரச்சேதத்துடன் உள்ளதோடு, பொதுமக்களின் உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கக்கூடும் என கண்டறியப்பட்டது. இந்த ஆய்வு கடந்த மே மாதத்தில் நடந்தது.

தடை செய்யப்பட்ட தயாரிப்புகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பாராசிட்டமால் மாத்திரையான Pomol-650 உள்ளிட்டவை உள்ளடங்கும். இது மைசூருவை தளமாகக் கொண்ட அபான் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் தயாரித்தது. மேலும், மைசூருவில் உள்ள என். ரங்கா ராவ் & சன்ஸ் தயாரித்த ‘ஓ சாந்தி’ கும்கமும் இதில் ஒன்று.
அதேபோல், டாம் பிரான் பார்மாசூட்டிகல்ஸ், அல்ட்ரா லேபரேட்டரீஸ், புனிஸ்கா இன்ஜெக்டபிள்ஸ், ஸ்வெஃப்ன் பார்மாசூட்டிகல்ஸ் போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகள், சோடியம் லாக்டேட் இன்ஜெக்ஷன், மிட்டு Q7 சிரப், பான்டோகாட் டிஎஸ்ஆர், இரோகெய்ன், பைராசிட்-ஓ போன்றவையும் இந்த பட்டியலில் உள்ளன.
சேஃப் பேரன்டெரல்ஸ் நிறுவனத்தின் கோழி தடுப்பூசிகளுக்கான ஸ்டெரைல் டைலூயன்ட்கள் உள்ளிட்ட கால்நடை பயன்பாட்டு தயாரிப்புகளும் தடை செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் விற்பனை செய்யவோ, மருத்துவமனைகளில் வழங்கவோ கூடாது என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இந்த முடிவுகள், மாநில மருந்து கட்டுப்பாட்டு துறை சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. கர்நாடகா முதல்வர் சித்தராமையா தலைமையில், சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்.
மருந்துகளின் தரம் மற்றும் மக்களின் நலனை பாதுகாக்கும் நோக்கத்தில் இந்நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.