வாஷிங்டன் நகரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசும்போது, இந்தியாவுடன் விரைவில் மிகப்பெரிய ஒப்பந்தம் நடைபெற உள்ளதாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். உலக நாடுகள் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள ஆர்வம் காட்டுகிறதா என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, “நேற்று சீனாவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இப்போது இந்தியா என்கிற மிகப்பெரிய பொருளாதார சக்தியுடன், வரலாற்றில் முதன்முறையாக மிக முக்கியமான ஒப்பந்தத்தைச் செய்ய தயாராக இருக்கிறோம்,” என அவர் குறிப்பிட்டார்.

அமேரிக்கா, எல்லா நாடுகளுடனும் ஒப்பந்தம் மேற்கொள்ள விரும்பவில்லை என்றும், சில நாடுகள் கட்டாயமாக வரி செலுத்த வேண்டும் என்பதையும் டிரம்ப் வெளிப்படையாக தெரிவித்தார். “25%, 35%, 45% வரி கட்ட வேண்டிய சூழல் சிலருக்கு உருவாகும். நாங்கள் ஒப்பந்தத்துக்கு பதில் நன்றி கடிதம் அனுப்புவோம். ஆனால், அமெரிக்க மக்களே வலியுறுத்தி சில ஒப்பந்தங்களை விரும்புகிறார்கள். அவர்கள் என் எதிர்பார்ப்பை விட அதிகமான செயற்பாட்டை விரும்புகிறார்கள்,” என்று அவர் கூறினார்.
அமெரிக்காவும் இந்தியாவும் கடந்த சில ஆண்டுகளாக பாதுகாப்பு, பொருளாதாரம், தொழில்நுட்பம், உள்துறை ஒத்துழைப்பு போன்ற அம்சங்களில் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன. தற்போது வரும் ஒப்பந்தம், இரு நாடுகளுக்குமான வர்த்தக மற்றும் உற்பத்தி கூட்டிணைப்பை மேம்படுத்தக்கூடியதாக இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் நம்புகின்றன. இந்தியாவின் வளர்ந்துவரும் தொழில்நுட்பச் சந்தையும், அமெரிக்காவின் முதலீட்டு ஆர்வமும் இந்த ஒப்பந்தத்திற்கு பின்னணி ஆகின்றன.
இந்தியாவுடன் உருவாகும் புதிய ஒப்பந்தம், இரண்டு நாடுகளுக்கும் புதுசாக பண்பட்ட நெருக்கத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இரு நாட்டு மக்களுக்கும் தொழில் வாய்ப்புகள், தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் வர்த்தக ஓட்டம் புதிய உயரங்களை நோக்கி செல்லும் வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.