சென்னை: லெஜெண்ட் சரவணனின் புதிய படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
லெஜண்ட் சரவணன் ஹீரோவாக நடித்த ‘தி லெஜண்ட்’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தற்போது, இரண்டாவது படத்தில் நடித்து வருகிறார்.
தொழிலதிபரான லெஜண்ட் சரவணன் தன்னுடைய கடையின் விளம்பரத்தில் அவரே நடித்தார்.
தொடர்ந்து இயக்குனர்கள் ஜெர்ரி & ஜெடி இயக்கத்தில் தி லெஜண்ட் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியானது.
தி லெஜண்ட் படத்தை தொடர்ந்து, எதிர்நீச்சல், கொடி, பட்டாசு, கருடன் படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா, நடிகர் சாம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இதில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக இருவர் உள்ளம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை பாயல் ராஜ்புத் நாயகியாக நடித்து வருகிறார்.
உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கான பூஜை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் போடப்பட்டு, தூத்துக்குடியில் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது.
தனது உறவினரின் திருமணத்தில் கலந்து கொண்ட லெஜெண்ட் சரவணன் “என்னுடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் படப்பிடிப்பும், போஸ்ட் புரொடக்சன் பணிகளும் நிறைவடையும். படத்தை தீபாவளிக்கு உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். மாஸ், ஆக்சன், சஸ்பென்ஸ், திரில் என அனைத்து சுவாரசிய அம்சங்களும் நிறைந்து இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும், டைட்டிலும் மாஸாக இருக்கும். இந்த தீபாவளி நம்ம தீபாவளியாக, அனைவரின் தீபாவளியாக இருக்கும். நன்றி, வணக்கம்” என்று தெரிவித்தார்.