மேட்டூர்: தூய்மைப்பணி… மேட்டூர் காவேரி பாலம், காவிரி ஆற்றங்கரை பகுதியில் எம்எல்ஏ சதாசிவம் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.
அப்போது காவிரி ஆற்று பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றி ஆற்றை தூய்மைப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். இதைதொடர்ந்து காவிரி ஆற்றங்கரை பகுதியில் சதாசிவம் எம். எல். ஏ. அவராகவே தூய்மை பணியை தொடங்கினார்.
தனது கட்சி நிர்வாகிகள், நகராட்சி துப்புரவு பணியாளர்களுடன் அங்கு கிடந்த குப்பைகள், பழைய துணிகள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணியில் அவர் ஈடுபட்டார். அப்போது நகராட்சி தலைவர் சந்திரா, நகர செயலாளர் மதியழகன் உள்ளிட்டவர்களும் தூய்மை பணியில் கலந்து கொண்டனர்.
சுமார் 10-க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் குப்பைகள் அகற்றப்பட்டன. அடுத்த வாரம் ஆடிப்பெருக்கு விழா நடைபெற உள்ள நிலையில் சதாசிவம் எம். எல். ஏ. தாமாக காவிரி ஆற்றில் தூய்மை பணியில் ஈடுபட்டதை பொதுமக்கள் வெகுவாக பாராட்டியதுடன் நன்றியும் தெரிவித்தனர்.
பின்னர் சதாசிவம் எம். எல். ஏ. கூறுகையில், காவிரி ஆற்றங்கரை பகுதியில் குப்பைகள் தேங்காமல் இருக்க அந்தந்த பகுதியில் உள்ள உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலம் தொட்டிகள் வைத்து குப்பைகளை சேகரிக்க ேவண்டும். மேலும் ஆற்றங்கரையில் இறுதிசடங்கு செய்ய வருபவர்களிடம் குறிப்பிட்ட கட்டணம் வசூல் செய்து ஆற்று பகுதியை தூய்மையாகவும் மாற்றிட நடவடிக்கை எடுக்கலாம் என்றார்.