சென்னை: அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கை:- விபத்துகளை ஏற்படுத்தும் கனரக வாகனங்களை 100 நாட்கள் வரை பறிமுதல் செய்ய சென்னை காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக, கடந்த 26-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு கோரிக்கையை சமர்ப்பித்தோம்.
கனரக வாகன உரிமையாளர்கள் மற்றும் பயணிகள் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் சேவை பாதிப்புகளை உணர்ந்து, சென்னை காவல் ஆணையரகம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து வாகனங்களை விடுவித்ததற்காக தமிழக முதலமைச்சருக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பெரும் முதலீடுகளுடன் இயங்கும் ஆம்னி பேருந்துகள் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளாமல், வழக்கமான பயண சேவைகளைத் தொடர முதல்வர் எடுத்த இந்த முடிவு, தமிழ்நாட்டில் உள்ள சாதாரண பயணிகளின் வாழ்வாதாரத்தையும், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் உட்பட பலரின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.