பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட சம்பவம், திரை உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. புழல் சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ள அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதில், நடிகர் ஸ்ரீகிருண்ணா தொடர்பும் வெளிப்பட்டதாக கூறப்படுகிறது. இதுவரை இந்த வழக்கில் 25 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்டோர் பட்டியலும் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து தயாரிப்பாளர் கே. ராஜன் இந்த விவகாரம் குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.

ஸ்ரீகாந்த் நடித்து வெற்றிபெற்ற ரோஜா கூட்டம் திரைப்படம் மூலம் திரையில் மின்னிய அவர், புகழின் உச்சியில் இருந்த நேரத்தில், சில நண்பர்களுடன் துவங்கிய மதுவழக்கம் அவரை ஆழமாகக் கட்டிக்கொண்டதாக ராஜன் கூறுகிறார். வெற்றி காலத்தில் பங்கு கொண்ட சிலர், பின்னர் பட வாய்ப்புகள் குறைந்தபின் மனவெறுப்பால் இந்த பாதையில் சறுக்கிவிடுகிறார்கள். நடிகர் மட்டுமல்ல, சில நடிகைகளும் தற்போது பார்ட்டிகளின் பெயரில் மது பயன்பாட்டில் அடிமையானதை ராஜன் வருத்தத்துடன் கூறியிருக்கிறார்.
ஸ்ரீகாந்தின் வாழ்க்கையில் ஏற்பட்ட குடும்ப பிரச்சனைகள், பணவசதி குறைவு, தயாரித்த படம் வெளியாவாதற்கு தாமதம் போன்ற காரணிகள் அவரை மன உளைச்சலுக்கு தள்ளியிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் ஒருவர் தவறான வழியில் செல்லும் நேரத்தில், அருகிலிருந்தவர்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டிய நிலையில், போதைப்பொருள் கொடுத்து தவறான பாதையில் இழுத்துவிட்டார்கள் என்பது சினிமாவின் வெளிச்சம் மங்கும் பக்கம். “பணம் தராததால் போதைப்பொருள் கொடுத்தார்” என்று ஸ்ரீகாந்த் கூறியிருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆனால், அந்த நேரத்தில் போலீசில் புகார் அளிக்காமல், அதனை பயன்படுத்தியதே பெரிய தவறாக ராஜன் கடுமையாக விமர்சிக்கிறார்.
படங்களில் மது மற்றும் போதைப்பொருள் சம்பந்தமான காட்சிகளை குறைக்க வேண்டியதைக் குறித்து ராஜன் உருக்கமாக பேசுகிறார். சினிமா என்பது சமூகத்தை பிரதிபலிக்கும் ஒரு சிறந்த ஊடகம் என்றால், அதில் தவறான செய்திகள் ஊடுருவக் கூடாது. பெண்கள் குடிக்கும் காட்சிகளை தொடர்ந்து சேர்ப்பது தமிழ் பாரம்பரியத்தை சீரழிக்கும் செயலாக இருப்பதையும், இயக்குநர்கள் சுய சிந்தனையுடன் செயல்பட வேண்டியதையும் அவர் வலியுறுத்துகிறார். இந்த விவகாரம் திரைத்துறையின் பொறுப்பையும், நடிகர் சங்கத்தின் நடவடிக்கையையும் கேள்விக்குள்ளாக்குகிறது.