இந்திய வேகப்பந்து வீரர் ஜஸ்ப்ரீத் பும்ரா கடந்த சில ஆண்டுகளாகவே அனைத்து வடிவங்களிலும் அணியின் முக்கியமான பவுலராக திகழ்கிறார். அவருடைய தனித்துவமான பந்துவீச்சு இந்திய அணியின் வெற்றிக்கு பெரும் பங்களிப்பாக இருந்துள்ளது. இருப்பினும் தொடர்ச்சியான பணிச்சுமை காரணமாக, சில போட்டிகளில் அவருக்கு ஓய்வு வழங்கப்படுகிறது. தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரிலும் பும்ரா இடம் பிடித்துள்ளார். எனினும், நிர்வாகம் அறிவித்தபடி மூன்று போட்டிகளில் மட்டுமே பங்கேற்பார் என்றும் முழுத்தொடரிலும் அவர் விளையாட முடியாது என்பதும் உறுதியாக உள்ளது.

இந்த நிலையில், தெனாப்பிரிக்காவின் முன்னாள் அணித்தலைவர் ஏ.பி.டி. வில்லியர்ஸ் பும்ராவை பாதுகாப்பதற்கான ஆலோசனைகளை தெரிவித்துள்ளார். பும்ரா தற்போது உலகின் சிறந்த பவுலராக திகழ்கிறார் என்றும், குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் அவரை தொடர்ந்து விளையாட வைப்பது இந்திய அணிக்கு மிகப் பெரிய பலமாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டே கிரிக்கெட்டின் உண்மையான வடிவம் என்பதால், இங்கிலாந்து போன்ற முக்கிய தொடரில் பும்ரா முழுமையாக பங்கேற்க வேண்டும் என்றார்.
தன் அணியின் முன்னாள் வேகப்பந்துவீரர் டேல் ஸ்டெயினை எடுத்துக்காட்டிய ஏபிடி, அவரை தேவையற்ற தொடர்களில் ஓய்வில் வைத்துவிட்டு, முக்கியமான ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற தொடரில் மட்டுமே களமிறக்கியதாக கூறினார். இதனால் ஸ்டெயினின் ஆற்றல் நீண்ட காலம் நிலைத்து இருந்தது என்றும், இதேபோல் பும்ராவும் சிறிய தொடர்களில் ஓய்வெடுத்து முக்கிய டெஸ்ட் தொடர்களில் மட்டுமே பங்கேற்றால், அவரால் நீடித்த காலம் சிறப்பாக விளையாட முடியும் என்று விளக்கினார்.
இங்கிலாந்து தொடரில் பும்ரா மூன்று போட்டிகளில் மட்டும் பங்கேற்பது என்பது மருத்துவ அறிவுரையின்படி எடுக்கப்பட்ட முடிவாக இருக்கலாம். ஆனால் எதிர்கால முக்கிய போட்டிகளை முன்னிட்டு பும்ராவை திட்டமிட்டு கையாள வேண்டும் என்பது ஏபிடியின் முக்கியமான கவலையாகும். இவரது ஆலோசனையுடன் ஒத்துப் போவது போலவே, ரசிகர்களும் பும்ராவை தொடர்ந்து களத்தில் பார்க்கவேண்டும் என்ற ஆசையுடன் இருக்கின்றனர்.