திருவள்ளூரில் உள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் ஸ்டூடியோவில், மத்திய இணையமைச்சர் எல். முருகன் திடீரென சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சந்திப்பு நேற்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்று, சுமார் ஒரு மணி நேரம் நீடித்ததாக கூறப்படுகிறது. சந்திப்புக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

தொடர்ந்து பரவிய தகவல்களில், மத்திய அரசின் “சத்யம், சிவம், சுந்தரம்” குறும்படத்திற்கு இசையமைத்ததைத் தொடர்ந்து, மரியாதை நிமித்தமாக எல். முருகன் நேரில் வந்து நன்றி தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அரசியல் பாணியில் இந்த சந்திப்பு மற்ற விவகாரங்களோடு இணைக்கப்படுகிறது.
அண்மையில் நடிகை மீனாவின் பாஜகவுடன் நெருக்கம் மற்றும் அமைச்சர் பதவி தொடர்பான பேச்சுகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தது. அதே போல், குஷ்பு, நமீதா, கலா மாஸ்டர் ஆகியோர் பாஜகவில் இணைய, மீனாவும் விரைவில் அரசியலுக்கு வரலாம் என பேசப்படுகிறது. எனவே ரகுமானும் ஒருவிதமான அரசியல் அணுகுமுறையா? என்ற கேள்வியும் எழுகிறது.
முன்னதாக தமிழ்நாட்டின் இணைப்பு மொழி குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா கருத்து வெளியிட்டபோது, தமிழை உறுதியாகக் கொண்டாடியவர் ரகுமான். தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் “தமிழணங்கே” என்ற பாடலையும் வெளியிட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மாநிலத்தில் பாஜக பதவிகள் மாற்றம், பல தலைவர்கள் ஏமாற்றத்தில் இருப்பது, மீனா உள்ளிட்டவர்களுக்கு பதவி வழங்கப்படுவது போன்ற செய்திகள் என பல்வேறு அரசியல் நகர்வுகளுக்கு இடையில் இந்த ரகுமான்–முருகன் சந்திப்பு பல அடுக்குகளைக் கொண்டதாகவும், முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது.