
பணிக்காலங்களில் கடுமையான காற்று மாசால் அவதிப்படும் டில்லி மக்களை பாதுகாக்க, 15 ஆண்டுகள் கடந்த பெட்ரோல் மற்றும் 10 ஆண்டுகள் கடந்த டீசல் வாகனங்களுக்கு புதிய தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. டில்லி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இது நேற்று (ஜூலை 1) முதல் நடைமுறைக்கு வந்தது. இதில் விதிகளை மீறி இயக்கப்பட்ட 24 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
டில்லியின் காற்று தரக்கூறு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை மோசமான அளவுக்கு செல்வதைக் கருத்தில் கொண்டு, காற்று தர மேலாண்மை கமிஷன் இந்த கடுமையான முடிவை எடுத்துள்ளது. இந்த வாகனங்கள் வெளிப்படுத்தும் புகையும், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாய கழிவுகளை எரிப்பதும் மாசுக்கு முக்கியக் காரணமாகும். இதனை கட்டுப்படுத்த டில்லி அரசு, டில்லி போலீஸ், போக்குவரத்து துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சேர்ந்த குழுவை அமைத்துள்ளது.

இந்த குழு, 500க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டது. வாகனங்களின் நம்பர் பிளேட்டை அடிப்படையாக கொண்டு, தயாரிப்பு ஆண்டை தெரிந்து கொள்ளும் கருவிகள் நிறுவப்பட்டன. இந்த நடவடிக்கையில் 19 இருசக்கர வாகனங்கள், ஒரு மூன்றுசக்கர வாகனம் மற்றும் சில கார்கள், லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அபராதமாக நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு ரூ.10,000 மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ரூ.5,000 விதிக்கப்பட்டது.
இந்த தடை நேரடி விளைவாக, ஹரியானா, உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து டில்லிக்கு வரும் காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கொண்ட வாகனங்கள் எல்லை பகுதியிலேயே இறக்கிவிட்டு செல்லும் நிலை உருவாகியுள்ளது. இதனால் டில்லியில் அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் சிரமப்படலாம் என அச்சம் கிளம்பியுள்ளது. இந்த மாதிரியான தடை, அடுத்த ஆண்டு ஏப்ரலில் குருகிராம், பரிதாபாத், காஜியாபாத், நொய்டா, சோனிப்பட் உள்ளிட்ட நகரங்களிலும் அமலுக்கு வருகிறது.