மேட்டூர்: கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 390 நாட்களுக்கு பிறகு மீண்டும் 90 அடியை எட்டியுள்ளது. கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து உபரி நீர் திறந்து விடப்படுகிறது.
இதனால் கடந்த ஒரு வாரமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த 2 நாட்களாக நீர்வரத்து குறைய தொடங்கியது. அணைக்கு இன்று காலை வினாடிக்கு 33,040 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மாலை வினாடிக்கு 28,856 கன அடியாக குறைந்தது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. ஆனால், அணைக்கு வரும் நீரின் அளவை விட தண்ணீர் திறப்பு குறைவாக உள்ளதால், நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. காலை 89.31 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று மாலை 90.01 அடியாக உயர்ந்தது.
அதேபோல் நீர் இருப்பு 51.86 டிஎம்சியில் இருந்து 52.66 டிஎம்சியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 30ம் தேதி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 90.45 அடியாகவும், நீர் இருப்பு 53.16 டிஎம்சியாகவும், நீர்வரத்து 145 கன அடியாகவும் இருந்தது. தற்போது 390 நாட்களுக்கு பிறகு மீண்டும் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கர்நாடகாவில் பெய்து வரும் மழையால், கேஆர்எஸ் அணை முழுமையாக நிரம்பியதையடுத்து, அணைக்கு உபரி நீர் திறப்பு 70 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், அணையின் நீர்மட்டம் விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.