புதுடில்லி: குரு பூர்ணிமா விழாவை முன்னிட்டு, டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் ரேகா குப்தா பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து கருத்து வெளியிட்டார். தெற்கு டில்லியின் அத்சினி கிராமத்தில் டில்லி மேம்பாட்டு ஆணையம் (DDA) சார்பில் நடத்தப்பட்ட “ஆரம்ப புஸ்தகாலயா” என்ற திட்டத்தை துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவுடன் இணைந்து அவர் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் பேசிய ரேகா குப்தா, குரு பூர்ணிமா தினத்தையொட்டி பிரதமர் மோடியை தனது குருவாகக் கருதுவதாக தெரிவித்தார். “அவரது கடின உழைப்புக்கு நான் தலைவணங்குகிறேன். ஐந்து நாடுகள் சுற்றுப்பயணத்தை எட்டு நாட்களில் முடித்தவர். பல சர்வதேச விருதுகள் பெற்றவர். அவரை பாராட்டுகிறேன்” எனக் கூறினார்.
மேலும், “நாட்டின் முன்னேற்றம் மட்டுமே முக்கியம் என்பது பிரதமர் மோடியின் செயல்பாட்டில் தெளிவாக தெரிகிறது. அவர் காட்டும் சிரத்தை மற்றும் நெறிமுறை எல்லோருக்கும் ஒரு பாடமாக இருக்கிறது. அவரிடம் நான் நன்றியுடன் வணங்குகிறேன்” என அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சி மற்றும் ரேகா குப்தா வெளியிட்ட கருத்துகள் தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.