சென்னை : மத்திய அரசின் நிதி அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது எதற்காக என்று தெரியுமா?
வீட்டுக்கு ஒரு வங்கி கணக்கு என்பதை அடிப்படையாக கொண்டு பிரதமரின் ‘ஜன்தன் யோஜனா’ திட்டம் எனப்படும் பிரதமரின் மக்கள் வங்கி கணக்கு திட்டத்தை கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ் ‘ஜீரோ பேலன்ஸ்’ (வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்பு இருக்க வேண்டிய அவசியம் இல்லை) என்ற அடிப்படையில் வங்கி கணக்கு தொடங்க அனுமதிக்கப்பட்டது. மேலும், இத்திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு தொடங்கியவர்களுக்கு ரூ.2 லட்சத்துக்கு விபத்து காப்பீடும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் குக்கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் வங்கி சேவையை பெற்று வருகின்றனர்.
இந்த திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் இதுவரை வரவு செலவுகளை மேற் கொள்ளாதவர்களின் கணக்குகள் முடித்து வைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவலுக்கு மத்திய அரசின் நிதி அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
பிரதமரின் மக்கள் வங்கி கணக்கு திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட வங்கி கணக்குகளில் இதுவரை எந்தவித வரவு, செலவு தொடர்பான பரிவர்த்தனை மேற்கொள்ளாத வங்கி கணக்குகளை முடித்து வைக்க வங்கிகளுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என மத்திய நிதி சேவைகள் துறை தெளிவுபடுத்தி உள்ளது.
இந்த வங்கி கணக்குகளின் எண்ணிக்கையை நிதி சேவைகள் துறை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், இத்திட்டத்தின் கீழ் வங்கி கணக்குகள் தொடங்கி எந்த பரிவர்த்தனையும் மேற்கொள்ளாத பட்சத்தில் அவர்களின் கணக்குகளை செயல்பட வைக்க கணக்கு வைத்திருப்பவர்களை தொடர்பு கொள்ள வங்கிகளை அறிவுறுத்தி உள்ளதாகவும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.