இன்றைய உலகத்தில் சில தலைவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள், நாகரிகத்தின் எல்லைகளை கடந்து மிகவும் கேவலமான நிலைக்கு சென்றுவிட்டன. குறிப்பாக, அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அரசியலுக்கு திரும்பியதிலிருந்து, சர்வதேச அரசியல் களத்தை தெருச் சண்டையாக மாற்றியுள்ளார். அவரின் நேரடியான, மிரட்டும் பேச்சு பின்தொடரும் மற்ற தலைவர்களுக்கும் மோசமான மாதிரியாய் மாறியுள்ளது.

முன்னோடியாக, கடந்த காலங்களில் நாடுகள் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டால், ஐ.நா. வாயிலாக முறையிடுவது, வெளிநாட்டு அமைச்சரகம் வாயிலாக உத்தியோகபூர்வ கண்டன அறிக்கைகளை வெளியிடுவது போன்ற நாகரிக வழிமுறைகள் பின்பற்றப்பட்டன. தலைவர்கள் நேரடியாக கொலை மிரட்டல் விடுப்பது அரிதாக இருந்தது. ஆனால், ட்ரம்ப் “ஈரான் தலைவர் கொலை செய்யப்படுவார்” என கூறியதைத் தொடர்ந்து, ஈரான், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் அதே போன்று பேச்சுக்களை நிகழ்த்தத் தொடங்கினர்.
இந்த வகை பிரச்னைகளால் சர்வதேச நம்பிக்கை முறையும், மரியாதையும் பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. “இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கினால் வரி உயர்த்துவோம்” என்று இந்தியாவை நேரடியாக மிரட்டும் ட்ரம்ப் பேச்சு, சர்வதேச ஒழுக்கத்திற்கு எதிரானது. தன் பாணியில் மட்டும் பேசிக்கொண்டு, உலக நாடுகளையும் WWF மல்யுத்த வீரர்களைப் போல நடத்த முயற்சிக்கிறார். இது அரசியல் சந்திக்க வேண்டிய பெரும் பரிதாபம்.
இந்நிலையில், இந்திய அரசியல் தலைவர்கள், பாகிஸ்தான் உள்ளிட்ட எதிர்ப்பு நாடுகளுடன் பல்வேறு பிரச்சனைகள் இருந்தும், ஒருபோதும் கொலை மிரட்டல்கள் விடுப்பதில்லை. இது நமது நாகரிகத்தின் ஒரு முக்கியச் சான்று. மேற்கத்திய நாடுகள் நாகரிகம், மனித உரிமை, கல்வி ஆகியவற்றை பெரிதும் பேசினாலும், நடத்தை மற்றும் பேச்சு முறையில் இந்தியாவிடம் சற்றும் மேலாக இல்லையென்பதே உண்மை. உலகத் தலைவர்கள் மீண்டும் நாகரிகத்துக்குத் திரும்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது.