லண்டனில் நடைபெற்று வரும் 2025-ம் ஆண்டு விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் தமது அதிரடியான ஆட்டத்தால் முதல் முறையாக விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றினார். பைனல் ஆட்டத்தில், அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவை எதிர்கொண்ட அவர், 6-0, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்றார். வெறும் 57 நிமிடங்களில் முடிந்த இந்த ஆட்டம், ஸ்வியாடெக்கின் பக்கத்தில் முழுமையான ஆதிக்கத்தை காட்டியது.

இது ஸ்வியாடெக்கின் 6வது கிராண்ட் ஸ்லாம் வெற்றியாகும். இதற்கு முன், அவர் பிரெஞ்ச் ஓபனில் நான்கு முறை (2020, 2022, 2023, 2024) மற்றும் யு.எஸ். ஓபனில் ஒரு முறை (2022) சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். ஆனால், இதுவரை விம்பிள்டனில் வெற்றி பெறாததுதான் ஒரு குறையாக இருந்தது. அந்த குறையும் இம்முறை நிகரற்ற ஆட்டத்துடன் துடைத்தெறிந்தார்.
இந்த வெற்றியின் மூலம், ‘ஓபன் எரா’வில் (1968க்கு பின்) விம்பிள்டன் பைனலில் 6-0, 6-0 என வென்ற முதல் வீராங்கனை என்ற வரலாற்றில் இடம்பிடித்தார் ஸ்வியாடெக். இதற்கு முன், 1911-ல் டோரோதியா லம்பர்ட் சேம்பர்ஸ் தான் இதே சாதனையை நிகழ்த்திய ஒரே வீராங்கனையாக இருந்தார். 114 ஆண்டுகளுக்குப் பிறகு, இவ்விதமான அபார வெற்றி மீண்டும் பதிவாகியுள்ளது.
வெற்றிக்கான பரிசாக, ஸ்வியாடெக்கிற்கு ரூ. 35 கோடி அளவிலான பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பெற்ற அனிசிமோவா ரூ. 17 கோடி பரிசுடன் திரும்பினார். இந்த வெற்றியின் மூலம், இகா ஸ்வியாடெக் உலக டென்னிஸ் அரங்கில் தனது இடத்தை மேலும் உறுதிப்படுத்தியுள்ளார்.