வாஷிங்டன்: ரஷ்யா மீது வர்த்தகத் தடை விதிப்பதில் மேற்கத்திய நாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், ரஷ்யா எண்ணெய் மற்றும் எரிவாயுவை தொடர்ந்து வாங்கும் நாடுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளர் மார்க் ரூட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் மார்க் ரூட், “இந்தியா, சீனா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் ரஷ்யா உடன் நீடித்த வர்த்தகம் மேற்கொண்டு அதன் எரிவாயு, எண்ணெய் பொருட்களை வாங்கும் நிலை தொடர்ந்தால், அவர்களது பொருளாதாரம் மீது 100% தடை விதிக்கப்படும்” எனத் தெரிவித்தார். மேலும், ரஷ்ய அதிபர் புடினை அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க இந்த நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த எச்சரிக்கையின் பின்புலமாக, உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் சூழலில், உலக நாடுகள் ரஷ்யாவை தனிமைப்படுத்த முயற்சிக்கின்றன. ஆனால், இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை தொடர்ந்து மேற்கொண்டு வருவது, மேற்கத்திய நாடுகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா தற்போது ரஷ்யாவிடம் இருந்து மிகப்பெரிய அளவில் சலுகை விலையில் எண்ணெய் வாங்கி வருகிறது.
இந்த சூழலில் நேட்டோ அமைப்பின் இந்த எச்சரிக்கை, குறிப்பாக இந்தியா, சீனா மற்றும் பிரேசிலின் பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய சாத்தியம் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். “தடை விதிக்கப்பட்டால், ரஷ்யா எண்ணெய் வாங்கும் முக்கிய நாடுகளில் ஒன்றான இந்தியா ஆபத்தான சூழ்நிலையை சந்திக்க நேரிடும்” என்கிறார்கள் நிபுணர்கள்.