வாஷிங்டன்: அமெரிக்க செனட்டர்களைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டே, “சீனா, இந்தியா மற்றும் பிரேசில் தலைவர்கள் உக்ரைனில் போர் நிறுத்தத்திற்கான அமைதிப் பேச்சுவார்த்தைகளை தீவிரமாக எடுத்துக் கொள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினை வலியுறுத்த வேண்டும்.
பேச்சுவார்த்தைகளை தீவிரமாக எடுத்துக் கொள்ளாத ரஷ்யாவுடன் நீங்கள் தொடர்ந்து வர்த்தகம் செய்து, அவர்களின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கினால், நீங்கள் 100 சதவீத வரிக்கு உட்படுத்தப்படுவீர்கள். இந்த மூன்று நாடுகளும் இதில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இந்த வரிகள் உங்களை மிகவும் பாதிக்கும். எனவே இந்த மூன்று நாடுகளின் தலைவர்களும் விளாடிமிர் புதினை அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்து தீவிரமாக எடுத்துக்கொள்ளச் சொல்ல வேண்டும்.

இல்லையெனில், பிரேசில், இந்தியா மற்றும் சீனா மீது மிகப்பெரிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும்.” நேற்று முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உக்ரைனுக்கு புதிய இராணுவ உதவியை அறிவித்தார். ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது அதிக வரிகளை விதிக்கப் போவதாகவும் அவர் அச்சுறுத்தினார். அடுத்த 50 நாட்களுக்குள் உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் திட்டம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
டிரம்பின் அச்சுறுத்தல்களுக்கு பதிலளித்த ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ், “அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக உள்ளது. ஆனால் இறுதி எச்சரிக்கைகளை வெளியிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது எந்த பலனையும் தராது” என்றார்.