கேரளாவில் சில மாவட்டங்களில் நிபா வைரஸ் பரவி இருவர் உயிரிழந்த நிலையில், தற்போது கொல்லம் மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் (Swine Flu) உறுதி செய்யப்பட்டு மக்கள் மத்தியில் புதிய கவலையை எழுப்பியுள்ளது. கொல்லத்தில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் காய்ச்சல் ஏற்பட்டது.

இதையடுத்து, பள்ளியில் அரசின் மருத்துவ குழுவினர் நேரில் சென்று பரிசோதனை நடத்தினர். பரிசோதனையின் முடிவில் நான்கு மாணவர்களுக்கு பன்றி காய்ச்சல் உறுதியாகக் கண்டறியப்பட்டது. நிலைமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, பள்ளிக்கு உடனடி விடுமுறை வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், பிற மாணவர்களுக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பன்றி காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பள்ளைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்பு மற்றும் சுகாதார பராமரிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன. மக்கள் பயத்திற்குள்ளாகாமல், ஆனால் தேவையான முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.
நிபா வைரஸ் பரவல் தொடங்கியுள்ள நேரத்தில், பன்றி காய்ச்சலும் மேலும் ஒரு சவாலாக உருவாகியிருப்பது, மாநில சுகாதாரத்துறைக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. சுகாதாரத்துறை தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில், பொதுமக்கள் நிம்மதியுடன் இருப்பதோடு, சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டியது அவசியமாகி இருக்கிறது.