வாஷிங்டன்: அமெரிக்காவில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு கடுமையான விசா கட்டுப்பாடுகள் பெரும் தடையாக மாறியுள்ளது. அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், குடியேற்ற விதிகளை கடுமைப்படுத்தியதன் தொடர்ச்சியாக, மாணவர் விசா ஒப்புதல்களும் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் வழங்கப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்க பல்கலைகளில் சேர, இந்திய மாணவர்கள் மட்டும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் என அதிக பங்கு வகித்து வந்தனர். ஆனால் கடந்த மூன்றாண்டுகளில், இந்த எண்ணிக்கை 70% குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

விசா விண்ணப்பங்கள் சீராக பரிசீலிக்கப்படுவதற்குப் பதிலாக, மாணவர்களின் கல்வி, பொருளாதார பின்னணி, தாய்நாட்டிற்குத் திரும்பும் நோக்கம் போன்றவை தீவிரமாக பரிசீலிக்கப்படுகின்றன. இதனால் மாணவர்கள் பெரும்பாலான நேரங்களில் நிராகரிக்கப்படுகின்றனர்.
இதன் காரணமாக, இந்திய மாணவர்கள் இப்போது ஜெர்மனி, பிரிட்டன், அயர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளை புதிய கல்வி முனைவாக தேர்ந்தெடுக்கத் தொடங்கி உள்ளனர். இந்த நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு ஆலோசனையுடன் விண்ணப்பிக்க இந்திய மாணவர்கள் முனைந்து வருவது கல்வி துறையில் புதிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.