அமராவதி: ஆந்திராவில் கடந்த 2019 முதல் 2024 மே மாதம் வரையிலான ஜெகன்மோகன் ஆட்சியில் ரூ.9.74லட்சம் கோடி வரை கடன் பெறப்பட்டு உள்ளது என்று முதல்வர்சந்திரபாபு நாயுடு தெரிவித்துஉள்ளார். இதுதொடர்பாக பேரவையில் அவர் நேற்று வெள்ளை அறிக்கை தாக்கல் செய்து பேசியதாவது: ஒருங்கிணைந்த ஆந்திராவில் தெலங்கானாவுக்கு 54 சதவீத மும், ஆந்திராவுக்கு 46 சதவீதமும் ஆதாயம் கிடைத்தது.
வளர்ச்சி பணிகளை மேற்கொண்டால் ஆந்திராவும் தெலங்கானா போல் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடையும். ரூ.1,667 கோடி செலவுசெய்து பட்டிசீமா அணையைதெலுங்கு தேசம் ஆட்சியில் கட்டினோம். இது கிருஷ்ணாவையும், கோதாவரியையும் இணைக்கும் திட்டமாக அமைந்தது. ஆனால் இந்த திட்டத்தைக்கூட ஜெகன் அரசு கண்டு கொள்ளவில்லை. எனினும் இதன் மூலம் ரூ.44 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது.
அமராவதிக்கு 34,400 ஏக்கர்நிலத்தை விவசாயிகள் தாங்களாகவே முன்வந்து வழங்கினர். அமராவதி தலைநகர பணிகளை ஜெகன் அரசு தொடர்ந்திருந்தால், 3 லட்சம் கோடி சொத்துகள், 7 லட்சம் வேலைவாய்ப்புகள் கிடைத்திருக்கும். கடந்த தெலுங்கு தேசம் ஆட்சியில் 7.72 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்தோம். வேகமாக முன்னே றும் மாநிலங்களின் பட்டியலில் ஆந்திரா 2-ம் இடம் பிடித்திருந்தது. ஆனால் ஜெகன் ஆட்சியில் மாநிலம் பின்தங்கிவிட்டது. மணல் கொள்ளையால் ஆந்திராவுக்கு ரூ.7ஆயிரம் கோடி யும், கனிமவள கொள்ளையால் ரூ.9,750 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை, ஜெகன் மோகன் அரசு முறையாக பயன் படுத்தவில்லை. அந்த ஆட்சியில், அரசு நிலங்களை அடமானம் வைத்து கடன் பெற்றனர். ரூ.40,000 கோடி மதிப்புள்ள அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. ஆந்திராவில் கடந்த 2019 முதல் 2024 மே மாதம் வரையிலான ஜெகன் மோகன் ஆட்சியில் ரூ.9.74 லட்சம் கோடி வரை கடன் பெறப்பட்டு உள்ளது. இதன்படி ஒவ்வொரு ஆந்திர குடிமகன் மீதும் ரூ.1.44 லட்சம் கடன் உள்ளது.
தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை கட்டாயம் நிறைவேற்றுவோம். அதற்கு முன்பாக கடந்த ஆட்சியில் என்ன நடந்தது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தவே வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.