இணையத்தில் “நீங்கள் கட்டிய வரிக்கு இவ்வளவு தொகை ரீபண்ட் கிடைக்கும். கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து உங்கள் விவரங்களை பதிவு செய்யுங்கள்” என வந்தடையும் மின்னஞ்சல்கள் தொடர்பாக மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுள்ளனர். இத்தகைய குறுந்தகவல்கள் மற்றும் மின்னஞ்சல்கள் முற்றிலும் போலி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை ‘பிரஸ் இன்பர்மேஷன் பீரோ’ வெளியிட்ட ஒரு முக்கிய அறிக்கையில் தெரிவித்துள்ளது. வருமான வரித்துறை அனுப்புவதாக கூறி, சுருங்கிய URL-கள் மற்றும் வங்கி விவரங்களை கேட்கும் போலி மின்னஞ்சல்கள் தற்போது பரவி வருகின்றன. இவை மூலமாக நபர்களின் வங்கி கணக்குகளில் இருந்து பணம் திருடப்படலாம். எனவே அரசின் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளை மட்டுமே நம்ப வேண்டும்.
வருமான வரித்துறையோ அல்லது சட்டபூர்வ நிதி நிறுவனங்களோ எப்போது வேண்டுமானாலும் மின்னஞ்சல், எஸ்.எம்.எஸ்., அல்லது தொலைபேசி அழைப்புகள் மூலம் உங்கள் வங்கி விவரங்கள், பாஸ்வேர்டுகள் அல்லது கிரெடிட் கார்டு எண்கள் போன்ற விவரங்களை கேட்கவே மாட்டார்கள். இது போன்ற சந்தேகத்திற்கிடமான தகவல்கள் வந்தால், அவற்றை கிளிக் செய்யாமலும், பதிலளிக்காமலும் தவிர்க்க வேண்டும்.
மேலும், இதுபோன்ற மின்னஞ்சல்கள் வந்தால், அதை உடனடியாக https://incometaxindia.gov.in/pages/report-phishing.aspx என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புகாரளிக்க வேண்டும். பொதுமக்கள் தங்கள் தனிப்பட்ட மற்றும் நிதி பாதுகாப்பை உறுதி செய்ய எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.