திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் அர. சக்கரபாணி, மாநில அரசு மக்களுக்கு சேவை செய்யும் வகையில் பல திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறினார். “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்களில் தகுதியுடைய மகளிர், மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், இந்த திட்டம் அனைத்துத் தரப்பினரும் அரசுத்துறை சேவைகளை நேரடியாகப் பெறும் வாய்ப்பை வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, “எல்லோருக்கும் எல்லாம்” என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டு மக்கள் நலனுக்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. ஒருங்கிணைந்த நகர்ப்புற மற்றும் ஊரக முகாம்கள் மூலம் மக்களின் குறைகளை நேரில் கேட்டறிந்து தீர்வு வழங்கப்படுவது முக்கிய நோக்கமாகும். தமிழகத்தில் மொத்தம் 10,000 முகாம்கள் நடத்தப்படும் நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 360 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த முகாம்களில், 43 நகர்ப்புற சேவைகள் மற்றும் 46 ஊரக சேவைகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை” திட்டத்தில் தகுதியுடைய ஆனால் இதுவரை விடுபட்ட பெண்கள், முகாம்கள் நடைபெறும் நாளன்று நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். இந்த முகாம்களில் மட்டும் விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும், 45 நாட்களுக்குள் அவை பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்கள் மாதம் ரூ.1000 பெறும் இந்தத் திட்டத்தில் தற்போது 1.16 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.
அதே நேரத்தில், ‘புதுமைப்பெண்’ திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதன்மூலம் சுமார் 5 இலட்சம் மாணவிகள் நன்மை பெற்றுள்ளனர். மாணவ மாணவிகளுக்காக “தமிழ்ப்புதல்வன்” திட்டம் செயல்படுத்தப்பட்டு, கல்விக்காக ரூ.360 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 54% ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சர் சக்கரபாணி கூறினார்.