காசியாபாத்தில் அதிர்ச்சியளிக்கும் வகையில், போலி தூதரகத்தை நடத்தி வந்த ஹர்ஷ்வர்தன் ஜெயின் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் கவி நகர் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, சர்வதேச தூதரகம் போன்று அலுவலகம் அமைத்து செயல்பட்டு வந்துள்ளார். கைது செய்யப்பட்ட ஜெயின், அதே பகுதியில் வசித்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அவர் பயன்படுத்திய நாட்டுப் பெயர்கள் வெஸ்டார்டிகா, சபோர்கா, பவுல்வியா, லண்டனியா என யாருக்கும் அறிமுகம் இல்லாதவை. தூதரக அதிகாரிகளுக்கே உரிய நம்பர் பிளேட் மற்றும் சொகுசு கார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல, பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் உடன் இருப்பது போல மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களையும் அலுவலகத்தில் வைத்திருந்துள்ளார். இது வழியாக அவர் வெளிப்படையாக பொது மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்தார்.
போலீசார் நடத்திய சோதனையில், ஹர்ஷ்வர்தன் ஜெயின் வசமிருந்து ரூ.44 லட்சம் ரொக்கம், வெளிநாட்டு கரன்சி, நான்கு சொகுசு கார்கள், பாஸ்போர்ட்கள், வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் போலி சீல் மற்றும் ஆவணங்கள், 34 போலி சீல் கட்டைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது வரை கண்டுபிடிக்கப்படாத அளவுக்கு ஒருவரால் அமைக்கப்பட்ட பெரிய அளவிலான ஏமாற்றுத் தந்திரமாக இது கருதப்படுகிறது.
வெளிநாட்டு வேலை வாய்ப்புகள், வர்த்தக ஒப்பந்தங்கள் என்கிற பெயரில் ஹவாலா பரிமாற்றங்களில் ஈடுபட்டு வந்ததும் தற்போது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அவரிடம் போலீசார் விசாரணை தீவிரமாக நடத்தி வருகின்றனர். இது போன்ற மோசடிகளை தடுக்கும் வகையில் அரசும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவங்களும் விழிப்புடன் செயல்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது.