புதுடில்லி: விவாகரத்து மனுவை தொடர்ந்து கணவர் மற்றும் மாமனார் மீது பொய் வழக்குப்பதிந்து, அவர்களை 100 நாட்களுக்கு மேல் சிறையில் வைத்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி, நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடுமையாக கண்டித்து உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் இந்திய நீதித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண் ஐ.பி.எஸ். அதிகாரி, தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததுடன், அவரின் குடும்பத்தினருக்கு எதிராக குற்றவியல் வழக்கும் பதிவு செய்திருந்தார். இந்த வழக்கில், கணவர் தரப்பும் தனது மீது பொய்யான குற்றச்சாட்டுகள் என தெரிவித்து, எதிர்மனுவும் தாக்கல் செய்திருந்தனர். இருவரும் இந்த வழக்குகளை தங்கள் சொந்த மாநிலங்களுக்கு மாற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், கணவரும் மாமனாரும் முற்றிலும் குற்றமற்றவர்கள் என உறுதியாகியதைத் தொடர்ந்து, அவர்களை தவறாக சிறையில் அடைத்த பெண் அதிகாரியின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தனர். நீதிமன்றம் கூறியதாவது, கணவர் 109 நாட்களும் மாமனார் 103 நாட்களும் சிறையில் இருந்தது ஒரு மனிதாபிமான குற்றமாகும். அவர்களது வேதனைக்கு மதிப்பீடு போட முடியாது என்றும் கூறப்பட்டது.
எனவே அந்த பெண் அதிகாரி, கணவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். இந்த மன்னிப்பு, மூன்று நாட்களுக்குள் பிரபல ஆங்கில மற்றும் ஹிந்தி நாளிதழ்களிலும், சமூக ஊடகங்களில் பதிவாக வேண்டும் என நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. இது பொது வாழ்வில் பொறுப்புமிக்க பதவிகளில் உள்ளவர்களுக்கு நீதிமன்றம் எழுப்பும் எச்சரிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.