பல இந்தியர்களுக்கு வீடு வாங்குவது என்பது வெறும் சொத்து முதலீட்டாக அல்ல, வாழ்க்கையின் வெற்றிக்கொடி போலவே கருதப்படுகிறது. அது தனித்துவமான உரிமையையும், பாதுகாப்பையும், ஒரு சமூக அந்தஸ்தையும் தருவதாக நம்பப்படுகிறது. ஆனால், இந்த உணர்வுகளை மையமாகக் கொண்டு வீடு வாங்கும் முடிவுகள், பல சந்தர்ப்பங்களில் பொருளாதார ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சராசரியாக, இந்தியர்கள் வீடு வாங்கும் போது 8-9 சதவீத வட்டியுடன் ஹோம் லோன் எடுக்கின்றனர். ஆனால், அந்த வீட்டை வாடகைக்கு விடும்போது கிடைக்கும் வருமானம் வெறும் 2-3 சதவீதம் மட்டுமே. பராமரிப்பு செலவுகள், சட்ட சிக்கல்கள் மற்றும் பணப்புழக்க சிக்கல்கள் ஆகியவை சேர்ந்துவிட்டால், உண்மையான ரிட்டன் அதற்கும் குறைவாகவே அமைகிறது. இது ரியல் எஸ்டேட் முதலீட்டின் மிகப்பெரிய தவறான கணக்கீடாகவே பார்க்கப்படுகிறது.

இந்த நிலையை மாற்றி மியூச்சுவல் ஃபண்டுகள், ஈக்குவிட்டி பாண்டுகள், SIPகள் போன்ற சந்தை சார்ந்த முதலீடுகள் அதிக ஆதரவை பெற்று வருகின்றன. SEBI-யின் புள்ளிவிவரங்கள் படி, மாதச் SIP பங்களிப்புகள் 2025 தொடக்கத்தில் ₹20,000 கோடியைத் தாண்டியுள்ளது. குறிப்பாக இளம் முதலீட்டாளர்கள் மூலதன சந்தையை நோக்கி நகர்வது தெளிவாக தெரிகிறது.
இதனால், சொத்து உரிமை குறித்த பாரம்பரிய எண்ணங்களை மாற்றிப் பார்ப்பது இன்றியமையாததாகியுள்ளது. வீடு வாங்கும் தீர்மானத்தை உணர்வுகளால் அல்ல, பொருளாதார யோசனைகளின் அடிப்படையில் செய்ய வேண்டும். வட்டி விகிதங்கள் உயரும் சூழலில், வாடகை வருமானம் மிகவும் குறைவாக இருப்பதால், பத்திரமான முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் ஃபைனான்ஸ் திட்டங்களை அதிக அளவில் கவனிக்க வேண்டிய தருணம் இது.