திருவனந்தபுரம்: ‘புத்தக பையில்லா நாட்கள்’ திட்டத்தை செயல்படுத்த கேரள அரசு திட்டமிட்டுள்ளதால், அம்மாநிலத்தில் உள்ள பள்ளி மாணவர்கள், மாதத்தில் நான்கு நாட்களுக்கு அதிக எடையுள்ள பைகளை எடுத்துச் செல்ல வேண்டியதில்லை.
இது தொடர்பாக கேரள மாநில பொதுக் கல்வித்துறை அமைச்சர் சிவங்குட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அதிக எடையுள்ள பள்ளிப் பைகள் குறித்த புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், பெற்றோர் மற்றும் குழந்தைகளின் கவலைகளை நிவர்த்தி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு பரிசீலித்து வருகிறது.
1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் பள்ளிப் பைகள் அதிக எடையுடன் இருப்பது தொடர்பான அறிவிப்பை அரசு விரைவில் வெளியிட உள்ளது. மாணவர்களின் பள்ளிப் பைகள் அதிக எடையுடன் இருப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் பொதுக்கல்வித்துறையில் அக்கறை கொண்டவர்களிடம் இருந்து பல்வேறு புகார்கள் மற்றும் ஆலோசனைகள் வந்துள்ளன.
மாணவர்களின் சுமையை குறைக்கும் வகையில் மாநிலத்தில் பாடப்புத்தகங்கள் இரண்டு தொகுப்பாக அச்சிடப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், மாணவர்களின் பள்ளிப் பைகள் அதிக எடையுடன் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. 1ம் வகுப்பு மாணவர்களுக்கு 1.6 கிலோ முதல் 2.2 கிலோ வரையிலும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 2.5 கிலோ முதல் 4.5 கிலோ வரையிலும் பள்ளி பையின் எடை இருக்க வேண்டும் என வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். இவை தவிர, அரசுப் பள்ளிகளில், மாதத்தில் நான்கு நாட்களுக்கு, ‘புத்தக பையில்லா நாட்கள்’ திட்டத்தை அறிமுகப்படுத்த, அரசு ஆலோசித்து வருகிறது,” என்றார்.