அலகாபாத் உயர் நீதிமன்றம் சமீபத்தில் காதல் திருமண வழக்கில் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. மதமாற்றம் இல்லாமல் நடைபெறும் கலப்புத் திருமணங்கள் சட்டப்பூர்வமல்ல என்று இந்த தீர்ப்பு தெளிவாக தெரிவித்துள்ளது. இது, ஆர்ய சமாஜ் கோவில்களில் திருமணம் செய்துக் கொண்டதாகக் கூறும் ஜோடிகள் குறித்த வழக்கை விசாரிக்கும் போது நீதிமன்றம் எடுத்த முக்கிய முடிவாகும். மைனர் சிறுமியைக் கடத்தி திருமணம் செய்ததாக சோனு என்ற நபர் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், அவர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுமிக்கு திருமணச் சான்றிதழ் வழங்கிய ஆர்ய சமாஜ் கோயில் சட்ட விதிகளை மீறியுள்ளதாகக் கூறினார். மேலும், சட்டப்படி கலப்புத் திருமணத்திற்கு இருவரும் ஒரே மதத்தைச் சேர்ந்திருக்க வேண்டும் அல்லது ஒருவராவது மதம் மாறியிருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது. இரு வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களுக்கிடையில் மதமாற்றமின்றி திருமணம் நடைபெறுவது சட்ட விரோதமாகும் என்றும் தீர்ப்பில் தெளிவுபடுத்தப்பட்டது. இதுதொடர்பாக உத்தரப்பிரதேச உள்துறை செயலாளர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிக்கு விசாரணை நடத்தி ஆகஸ்ட் 29க்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், மனுதாரர் தனது திருமணம் குறித்த முறையான தகவல்களை முன்வைத்திருந்தாலும், அவர் மீது குழந்தை கடத்தல், பாலியல் வன்கொடுமை, பாக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. மனுவை எதிர்த்து உபி அரசு வாதிட்டபோது, இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், திருமணத்திற்கு உரிய சட்ட அங்கீகாரம் இல்லை என்றும் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. நீதிமன்றம் இதற்கிடையில் பல ஆர்ய சமாஜ் கோவில்கள் சட்ட நடைமுறைகளை பின்பற்றாமல் திருமணச் சான்றிதழ்களை வழங்கி வருவதை சுட்டிக்காட்டி, இது சட்டவிரோதமானது என அறிவித்துள்ளது.
ஆர்ய சமாஜ் திருமணம் என்பது வேத சடங்குகளின் அடிப்படையில் நடக்கும் எளிய ஹிந்து திருமணமாக இருந்தாலும், அதற்கும் சட்டத்தின்படி வயது மற்றும் மத அனுபதிகள் அவசியமாகிறது. இந்த தீர்ப்பு, சட்டப்படி திருமணத்தின் நிபந்தனைகள் மற்றும் மத மாற்றத்தின் அவசியம் குறித்து ஒரு புதிய புரிதலை உருவாக்குகிறது. மதமாற்றம் இல்லாமல் நடத்தப்படும் கலப்புத் திருமணங்கள் சட்ட பூர்வமல்ல என்பது, தற்போது பலர் செய்யும் காதல் திருமணங்களில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது.