புதுடெல்லி: குஜராத், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் பணி ஓய்வு பெறும் அக்னி படை வீரர்களுக்கு தங்கள் மாநிலங்களில் அரசு வேலைகளில் இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில், இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் இளைஞர்களை சேர்க்க அக்னி பாதை திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், அக்னி வீரர்களாக பணியில் சேரும் இளைஞர்கள் 4 ஆண்டுகள் பணிபுரிவார்கள் என்றும், அதன்பிறகு 25 சதவீதம் பேர் தகுதியின் அடிப்படையில் நிரந்தரப் பணியில் (15 ஆண்டுகள்) இணைக்கப்படுவார்கள் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனால், இதுவரை நிரந்தர பணியாக இருந்த ராணுவ உயர் பதவி தற்காலிக பணியாக தரம் தாழ்த்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதனிடையே, குஜராத், உத்தரகாண்ட், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், உத்தரபிரதேசம், ஒடிசா ஆகிய 6 பாஜக ஆளும் மாநிலங்களில் ஓய்வு பெறும் அக்னி படை வீரர்களுக்கு அந்தந்த மாநிலங்களில் அரசு வேலை வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தியாகிகளின் குடும்பங்களுக்கான உதவித்தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தப்படும் என்று உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்தார். மாநில காவல்துறை மற்றும் ஆயுதப்படை ஆள்சேர்ப்பில் அக்னி படை வீரர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் அக்னி படைவீரர்களுக்கு போலீஸ் கான்ஸ்டபிள் மற்றும் வனக்காவலர் பணியிடங்களில் இடஒதுக்கீடு வழங்கப்படும். அக்னி வீரர்களுக்கு நிலையான இடஒதுக்கீடு வழங்க தேவையான வழிகாட்டுதல்களை மாநில அரசு விரைவில் வெளியிடும் என்று முதல்வர் விஷ்ணு தியோ சாய் கூறினார்.
உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பணியில் இருந்து நாடு திரும்பும் அக்னி வீரர்கள் போலீஸ் படை மற்றும் பிஏசி படைகளில் சேர வெயிட்டேஜ் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
ஒடிசா மாநிலத்தில் உள்ள சீருடைப் பணிகளில் அக்னி படை வீரர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு மற்றும் 5 ஆண்டுகள் வயது தளர்வு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் மோகன் மாஜி அறிவித்துள்ளார்.