71ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக திரைப்பட கலைஞர்களுக்குக் கிடைத்த வெற்றிக்கு பாராட்டுகள் குவிகின்றன. இதையடுத்து, கவிப்பேரரசு வைரமுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். விருது பெற்ற கலைஞர்களை பாராட்டியதோடு, ‘ஆடுஜீவிதம்’ மற்றும் ‘அயோத்தி’ படங்களுக்கு விருது கிடைக்காதது ஏமாற்றம் என அவர் பதிவிட்டுள்ளார்.

அவரது வாழ்த்துப் பதிவில், “விருதுகள் சிலவெனினும் பெற்றவரைக்கும் பெருமைதான். கலைக் கண்மணிகளுக்கு என் தூரத்துப் பூக்களைத் தூவுகிறேன். இந்த வெற்றிகள் மேலும் உழைக்க ஊக்கமளிக்கட்டும்” என குறிப்பிட்டுள்ளார். நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், நடிகை ஊர்வசி, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்டோருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பார்க்கிங் திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் மற்றும் சிறந்த தமிழ் படம் என மூன்று தேசிய விருதுகளை பெற்றுள்ளது. இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம், சினிஷ் ஆகியோரின் பெயர்களும் வாழ்த்துப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
மேலும் நடிகர் கமல்ஹாசனும், விருது பெற்ற கலைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், தமிழ்படங்களுக்கு வரும் தேசிய அளவிலான அங்கீகாரம் பெருமையாகக் கருதப்படுகிறது. ஆனால், இலக்கிய அடிப்படையில் பாராட்டப்பட்ட ‘ஆடுஜீவிதம்’ மற்றும் சமூக அரசியல் தாக்கம் மிகுந்த ‘அயோத்தி’ ஆகிய படங்களுக்கு இடமில்லாதது குறித்த விமர்சனங்கள் தொடர்கின்றன.