திருச்சியில் நடைபெற்ற ‘நலன் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாமை பார்வையிட்டு பேசிய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, “ஓபிஎஸ் தற்போது திமுக கூட்டணிக்கே வந்து கொண்டிருக்கிறார்” என குறிப்பிட்டார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, ஓபிஎஸ் பாஜகவுடன் கூடிய தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில், அவர் தவெகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவர் முதல்வர் ஸ்டாலினை இருமுறை சந்தித்ததும், அவரது திட்டங்கள் குறித்த புகழ்ச்சி பேசப்பட்டதும், பல்வேறு அரசியல் கருகூறுகளை கிளப்பியுள்ளன.
‘நலன் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் மாநிலம் முழுவதும் தொடங்கப்பட்ட நிலையில், திருச்சியில் முகாமை ஆய்வு செய்ய வந்த நேரில் செய்தியாளர்களிடம் கே.என்.நேரு கூறியதாவது, “அமைச்சரவை திட்டங்களுக்கு ஸ்டாலின் பெயர் வைக்கக் கூடாது என சொல்வது வெறும் அரசியல் நாடகம். அவர்கள் முன்னர் எல்லா திட்டங்களிலும் ‘அம்மா’ என்றே வைத்தார்கள்” என விமர்சித்தார். மேலும், “அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் திமுகவுக்கே வருகிறார்கள். ஓபிஎஸ் வந்து கொண்டிருக்கிறார்” எனத் தெரிவித்து புதிய கிளைகளைத் தொடங்கினார்.
அமைச்சர் துரைமுருகன், ஓபிஎஸ்–ஸ்டாலின் சந்திப்பு குறித்து விளக்கமளிக்கும்போது, “அவர் அரசியல் பண்பாட்டுடனும், நல விசாரணையுடனும் சந்தித்தார், கூட்டணி பேசவேயில்லை” என திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தாலும், திமுக மற்றும் ஓபிஎஸ் அணியின் அண்மைய சூழ்நிலைகள் அரசியல் கூட்டணி வாய்ப்புகள் குறித்து பேச வைக்கின்றன.