மும்பை: ‘ராஞ்சனா’ என்பது ஆனந்த் எல். ராய் இயக்கிய இந்தி படம். 2013-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தின் மூலம் தனுஷ் இந்தித் திரையுலகில் அறிமுகமானார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து சோனம் கபூர் கதாநாயகியாக நடித்தார். இது தமிழிலும் ‘அம்பிகாபதி’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
இந்தப் படத்தை இப்போது அப்ஸ்விங் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் நவீன தொழில்நுட்பத்துடன் வெளியிடுகிறது. இதற்காக, படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் மாற்றியுள்ளது. இது படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இயக்குனர் ஆனந்த் எல். ராய் சமீபத்தில் இது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தாலும், இப்போது நடிகர் தனுஷும் இந்த விவகாரத்தை கண்டித்துள்ளார்.

இது தொடர்பாக தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “‘ராஞ்சனா’ படத்தின் கிளைமாக்ஸை செயற்கை நுண்ணறிவு மூலம் மாற்றி மீண்டும் வெளியிட்டது என்னை மிகவும் வருத்தப்படுத்தியுள்ளது. மாற்றப்பட்ட இறுதிக் காட்சி படத்தின் அசல் ஆன்மாவை அழித்துவிட்டது. எனது தெளிவான ஆட்சேபனைகளை மீறி இந்தக் குழு இதைச் செய்துள்ளது.
இது 12 ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒப்புக்கொண்ட படம் அல்ல. செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் திரைப்படங்களையும் உள்ளடக்கத்தையும் மாற்றுவது கலை மற்றும் கலைஞர்களுக்கு மிகுந்த கவலையளிக்கும் விஷயம். இது கதைசொல்லலின் நேர்மையையும் சினிமாவின் மரபையும் அச்சுறுத்துகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களைத் தடுக்க கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்படும் என்று நம்புகிறேன்,” என்று தனுஷ் கூறினார்.