அனுப்பும் மற்றும் பெறும் பயனர் மட்டுமே செய்திகளைப் படிக்க முடியும் என்பதை உறுதிசெய்யும் வகையில் வாட்ஸ்அப்பின் என்க்ரிப்ஷன் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் பயனரின் தனியுரிமைக்கு முக்கியமானது என்று WhatsApp வாதிடுகிறது.
இந்தியாவில் வாட்ஸ்அப் சேவையை நிறுத்தும் திட்டம் எதுவும் இல்லை என அந்நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா உறுதி அளித்துள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
காங்கிரஸ் உறுப்பினர் விவேக் தங்கா எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்தியாவில் செயல்படுவதை நிறுத்தும் திட்டம் குறித்து வாட்ஸ்அப் அல்லது மெட்டா தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு தெரிவிக்கவில்லை என்று கூறினார்.
தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000ன் பிரிவு 69A-ன் கீழ், மத்திய அரசுடன் பயனர் விவரங்களைப் பகிர்ந்து கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதால், வாட்ஸ்அப் தனது சேவையை நிறுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறது என்ற செய்திகளுக்கு மத்தியில் அமைச்சரின் பதில் வந்துள்ளது.
சமூக ஊடக தளங்கள் தொடர்பான மத்திய அரசின் உத்தரவுகள் தேசிய பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கை உறுதிப்படுத்தும் வகையில் வெளியிடப்படுவதாகவும் அமைச்சர் வைஷ்ணவ் தெளிவுபடுத்தினார். இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பைப் பாதுகாப்பதற்கும் மற்ற நாடுகளுடன் நட்புறவைப் பேணுவதற்கும் இந்த வழிகாட்டுதல்கள் முக்கியமானவை என்றார் அவர்.
மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவுகளின் நோக்கம், குற்றங்களைத் தூண்டும் அல்லது அமைதியைக் குலைக்கும் செயல்களைத் தடுப்பதாகும்.இந்த ஆண்டின் தொடக்கத்தில், வாட்ஸ்அப் தனது குறியாக்க அம்சத்தை சமரசம் செய் ய நிர்ப்பந்தித்தால், இந்தியாவில் அதன் சேவையை நிறுத்தி வைப்பதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
அனுப்பும் மற்றும் பெறும் பயனர் மட்டுமே செய்திகளைப் படிக்க முடியும் என்பதை உறுதிசெய்யும் வகையில் வாட்ஸ்அப்பின் என்க்ரிப்ஷன் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் பயனரின் தனியுரிமைக்கு முக்கியமானது என்று WhatsApp வாதிடுகிறது.
மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் தனியுரிமை உரிமைகளை மீறுவதாகவும், அரசியலமைப்புக்கு எதிரானவை என்றும் வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
முன்னதாக, Meta Group CEO Mark Zuckerberg, மெசேஜிங் தொழில்நுட்பங்களை இந்தியா விரைவாக ஏற்றுக்கொள்வதை பாராட்டினார், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை ஏற்றுக்கொள்வதில் இந்தியா உலகளாவில் முன்னணியில் உள்ளது என்று குறிப்பிட்டார்.
இந்தியாவில் வாட்ஸ்அப் 400 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது. உலகிலேயே அதிக பயனர்களைக் கொண்ட நாடு இந்தியா. இதனால்தான் மெட்டா நிறுவனம் இந்திய பயனர்களின் தனியுரிமைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இது தொடர்பான சட்டப் போராட்டங்கள் இருந்தபோதிலும், வாட்ஸ்அப் இந்திய சந்தையில் இருந்து வெளியேறத் திட்டமிட்டுள்ளதாக எந்த அறிகுறியும் இல்லை.